வியாழன், 22 செப்டம்பர், 2011

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நார்மல் பிரச்சனைகள் ?

 
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அடிவயிற்றில் அசௌகர்யமும், இழுத்துப் பிடித்துக் கொள்ளுதலும் ஏன் ஏற்படுகிறது?

கருத்தரித்த ஆரம்பகாலத்தில் பெண்களுக்கு அடிவயிற்றில் ஒரு விதமான அசௌகர்யமும், பீரியட்ஸ் சமயங்களில் ஏற்படுவது போலவே அடி வயிற்றில் இழுத்துப் பிடிப்பதும் ஏற்படும். இது ஏனென்றால் வயிற்றில் உள்ள குழந்தை வளரவளர கருப்பையும் விரியத் தொடங்கும். இதனால்தான் மேலே சொன்ன விஷயங்கள் அடிவயிற்றில் நடக்கின்றன. இந்த அசௌகர்யம் கர்ப்பமடைந்த முதல் சில மாதங்கள் வரை தொடரும்.சில நேரத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது வரும். அதே போல படுத்துக் கொண்டே ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குத் திரும்பும் போதும் ஏற்படும். இந்த வலி நார்மல்தான். இதற்கு நீங்கள் பெட் ரெஸ்ட்டெல்லாம் எடுக்கத் தேவையில்லை. இந்த வலி நீங்கள் வேகமாக நடக்கும்போது ஏற்பட்டால் சில நிமிடத்திற்கு ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடக்கத் தொடங்கலாம்.

கர்ப்பம் வளர வளர சில பெண்களுக்கு அடி வயிற்றில் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமோ வலி ஏற்படலாம்.இது ஏனென்றால், கர்ப்பப்பையில் இரண்டு பக்கமும் இருக்கும் ரவுண்ட் லிகமெண்ட்ஸ் (Round Ligaments) விரிவதனால். இந்த வலியை குறைப்பதற்கு வலி இருக்கும் பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டாலே போதும்.

அடிக்கடி சிறுநீர் வருதல்!

கர்ப்பமான புதிதில் அடிக்கடி யூரின் போக வேண்டும் போலத் தோன்றும். சிறுநீர்ப்பை அடிக்கடி நிரம்பிவிடுவது போல் உணர்வார்கள். எனவே அடிக்கடி பாத்ரூமை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். இந்த அறிகுறி கர்ப்பமடைந்த முதல் 16 வாரங்கள் வரைக்கும் இருந்து விட்டு, பின்னர் தானாகவே மறைந்து விடும்.

இந்த சமயத்தில் ஏன் அடிக்கடி யூரின் வருகிறது?

குழந்தை வளரவளர கருப்பை பெரிதாகி சிறுநீர்ப்பையை அழுத்த ஆரம்பிக்கும். இந்த அறிகுறி கர்ப்பமடைந்த புதிதிலும், கர்ப்பமான கடைசி மாதங்களிலும் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் கடைசி சில பெண்களுக்கு தும்மும் போதும், இருமும் போதும் லேசாக சிறுநீர் கசியும். இந்த அறிகுறி டெலிவரியான சில மாதங்களில் மறைந்து விடும்.

பொதுவாக கர்ப்பமான ஆரம்ப மாதங்களில் அடிக்கடி தீவிரமான தலைவலி ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் இந்த தலைவலி கண்கள் ஸ்ட்ரெயின் ஆவதாலோ அல்லது சைனஸாலோ கூட ஏற்படலாம். ஆனால் மேக்ஸிமம் இந்த தலைவலிகளுக்கு காரணமே தெரிவதில்லை.

இதற்கு பாரசிட்டமால் (Paracetamol) மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால், கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இது இன்னும் அதிகமாகும். ஈஸ்ட்ரோஜன் அதிகமாவதுதான் இதற்கு காரணம்.

கருத்தரித்த ஆரம்பத்தில் `மூட் அப்செட்' ஆவது நார்மல்தான். கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்கள் திடீரென்று அதிகமாக சுரப்பதால் கருத்தரித்தப் பெண்கள் எமோஷனலாக சில ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளுவார்கள். இதனால் அவர்கள் சட்டென்று அழுவார்கள்...
கோபப்படுவார்கள்... மற்றும் காரணமே இல்லாமல் அப்செட் ஆவார்கள். கருத்தரித்த பெண்கள் இப்படி நடந்து கொள்ளும்போது, அவருடைய கணவரும், குடும்பத்தாரும் காரணம் தெரியாமல் தயங்குவார்கள். சில நேரங்களில் கவலையும்படுவார்கள்.

ஆனால் இந்தப் பிரச்னையெல்லாம் தற்காலிகம்தான். சில நாட்களில் உடம்பிற்கு இந்த ஹார்மோன் உற்பத்தி பழகிய பின் இவையெல்லாம் சரியாகிவிடும்.

கருத்தரித்த ஆரம்பத்திலும்,கடைசியிலும் சோர்வாகவோ அல்லது மயக்கம் வருவது போலவோ உணர்வது பொதுவான அறிகுறிதான். கர்ப்பமாக இருக்கும் போது ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால் நின்று கொண்டிருக்கும் போது இரத்தம் கால்களில் சேர்ந்துவிடும். சட்டென்று கிறுகிறுப்பாகவோ அல்லது மயக்கம் வருவது போன்றோ தோன்றும். இப்படி ஏற்படும் போது கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டு கால்களைத் தூக்கி ஒரு தலையணை மேல் வைத்துக் கொள்வதுதான் இதற்கு பெஸ்ட் தீர்வு.

கருத்தரித்த புதிதில் சில பெண்களுக்கு குளிர்வது போன்றும், ஜுரம் இருப்பது போன்றும் தோன்றும். ஆனால் ஜுரம் இருக்காது. இந்த அறிகுறியும் கர்ப்பமான 4-ம் மாதத்தில் சரியாகி விடும்.

கருத்தரித்த முதல் சில வாரங்களில் சில பெண்களுக்கு மலச்சிக்கல் இருக்கலாம். ஏனென்றால், குமட்டல் இருப்பதால் தண்ணீர்கூட குடிக்க முடியாத நிலையில் இருப்பார்கள். இதனால் சாதாரணமாக மலம் கழிப்பவர்களுக்குக் கூட இந்த பிரச்னை வரலாம். தீவிர மலச்சிக்கல் இருக்கும்போது மலம் கெட்டியாக இருப்பதால் வலியும், ரத்தக் கசிவும் ஏற்படலாம். இதற்கு நீராகாரங்களை நிறையச் சாப்பிட்டு, கொஞ்சம் எக்ஸர்சைஸ் செய்தாலே இந்த பிராப்ளம் சரியாகி விடும். ஆனால் இந்தக் குமட்டல் உங்களை எந்த நீராகாரமும் சாப்பிடவிடாமல் செய்தால் டாக்டரிடம் அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும் மேலே சொன்ன பிரச்னை வரலாம். இதற்கு மோர், ஜூஸ், காய்கறி சாலட், பழங்கள் இவையெல்லாம் தீர்வே... கர்ப்பமாக இருக்கும்போது சில மாதங்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகலாம். கருப்பை வாயிலிருந்து சளி போன்ற டிஸ்சார்ஜ் அதிகமாகும் இது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இது சாதாரண விஷயம்தான். இந்த டிஸ்சார்ஜால்உங்களுக்கு அரிப்போ, எரிச்சலோ இருந்தால்தான் இன்ஃபெக்ஷன் என்று நினைக்க வேண்டும். இதற்கு மாத்திரைகளும், ஆயின்மெண்ட்டும்தான் ட்ரீட்மெண்ட்!