வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நண்டு கறி



சமைக்கும் நேரம் = 30 நிமிடங்கள்
அளவு = 5 நபர்களுக்கு

தேவையானப் பொருட்கள்:
6 நண்டு
1/4 தேங்காய்
1/2 கோப்பை தயிர்
2 வெங்காயம்-
2 தக்காளி
1/2 தே.க இஞ்சி அரைத்தது
1/2 தேக உள்ளி அரைத்தது
2 பச்சைமிளகாய்
6 செத்தல்
1 மே.க மல்லித்தூள்
1 தே.க மஞ்சள்த்தூள்
1 தே.க மிளகு
1 தே.க சீரகம்
4 கராம்பு
1 பட்டை கறுவா
1/2 கோப்பை எண்ணெய்
1 கொத்து கறிவேப்பிலை


செய்முறை:
  1. நண்டை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  2. தேங்காயை துறுவி, சட்டியில் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் செத்தல், மல்லித்தூள்,மிளகு சீரகம்,பட்டை,கராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  4. இவற்றுடன் தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. சட்டியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  6. பின்னர் இஞ்சி உள்ளி, பச்சைமிளகாய்,தக்காளி,மஞ்சள்த்தூள் போட்டு வதக்கவும்.
  7. பிறகு அரைத்த கலவையை போட்டு வதக்கி தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. பிறகு உப்பை போட்டு நண்டை போட்டு கிளறி விடவும்.
  9. இறுதியாக 2 கோப்பை தண்ணி சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கிவிடவும்.

பால் அப்பம்

 


1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்

1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்

1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்

குவித்து ஒரு தேக்கரண்டி சீனி

பெரிய பாதித் தேங்காய்

1 தே.க. உப்புத்தூள்

1/3 தே.க. அப்பச்சோடா

*

பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்சூடாகவுள்ள நீரினுள் வைத்து, 12 மணி நேரம் புளிக்கவிடவும். இளஞ்சூடு சற்று நேரமாகிலும் பிடிக்காவிட்டால் மா புளிக்கவேமாட்டாது.

மா புளித்தவுடன், தேங்காயைத் துருவி, சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இரண்டு தரம் பாலைப் பிழிந்து, தடித்த பாலாக 1/3 சுண்டுவரை எடுத்து வேறாக வைத்துக் கொள்க. மறுபடியும் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு 2-3 தரம் பிழிந்து, 3/4 சுண்டு வரையிலான பால் எடுத்து, மாவில் விட்டு, உப்பு, அப்பச்சோடா என்பவற்றையும் போட்டு, நன்றாகக் கரைத்துக்கொள்க.

பின்னர் ஒரு பழகிய அப்பத்தாச்சியை (seasoned pan) மிதமாக எரியும் அடுப்பின்மீது வைத்து, காய்ந்தவுடன், ஒரு துணிப் பொட்டணத்தை நல்லெண்ணையில் தொட்டு, தாச்சியின் உட்புறம் முழுவதிலும் இலேசாகத் தேய்த்துப் பூசி, 4 மேசைக்கரண்டியளவு மாவை ஒரு கரண்டியினால் அள்ளி வார்க்கவும். வார்த்தவுடன் தாச்சியைத் தூக்கி, சற்றுச் சரித்து, ஒருமுறை வட்டமாகச் சிலாவி விட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, வேறாக வைத்த தடித்த தேங்காய்ப்பாலில் 2 தேக்கரண்டியளவை நடுவில் பரவலாக விட்டு, ஒரு இறுக்கமான மூடியினால் மூடி வேகவிடவும். "சிலுசிலு" என்று மூடியிலிருந்து நீர் சொட்டும் சத்தம் கேட்டவுடன் திறந்து பார்த்து, வெந்த அப்பத்தை ஒரு தட்டகப்பையினால் எடுத்து. ஒரு பெரிய தாம்பாளத்தில் சுற்றிவர அடுக்கி வரவும். பால் அப்பிக்கொள்ளாதபடி, ஒன்றினது ஓரம் மரத்தின்மீது படியும்படி வைத்து, இன்னொரு தாம்பாளத்தினால்மூடி விடவும்.

குறிப்பு: ஒரு அப்பம் வேகுவதற்கு 2 ½-3 நிமிடங்கள் வரை செல்லும். செம்மையாகச் சுடப்பட்ட அப்பம் வாசனையாகவும், அழகாகவும் இருக்கும். இதன் ஓரம் மொறமொறப்பாகவும், பொன்னிறமாகவும் இருக்கும்; நடுவில் துவாரங்கள் விழுந்து, துவாரங்கள் தடித்த பாலில் தோய்ந்திருக்கும்.

கரைத்த மா அதிக தடிப்பாக இருந்தால், அப்பத்தின் ஓரம் மட்டை போலவும், நடுப்பாகம் கனமாகவும் இருக்கும். தண்ணீர் கூடிவிட்டால், ஓரம் உடைந்து மாவாகி விடுவதுடன், நடுப்பாகமும் களிபோல இருக்கும். எனவே, அப்பத்திற்கான மாவை அவதானமாகக் கரைத்தல் வேண்டும்.

அப்பச்சோடாவைக் கட்டுமட்டாகப் பாவித்தல் வேண்டும். கூடினால், அப்பம் மஞ்சள் நிரமடைவதுடன், ஒருவித வாடையும் வீசும். முதலில் இதனைக் கொஞ்சமாக போட்டுக் கரைத்து, ஒரு அப்பத்தைச் சுட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தேவைப்படி போட்டுக்கொள்க.

அப்பத்தை இளஞ்சூடாக, வெறுமனே, அல்லது கட்டைச்சம்பல், சீனிசம்பல், சம்பலுடன் பரிமாறலாம்
 
 

பன்னீர் பரோட்டா



சாதம் பல வகைகளில் செய்கிறோம். மாவு உணவுகள் பல விதமாக தயாரிக்கிறோமா என்றால் குறைவுதான். நாம் இந்த முறை கற்றுக் கொள்ள இருப்பது புதிய வகை மாவு உணவுதான். கோதுமை மாவுடன், பன்னீர் சேர்த்து சுவையான பன்னீர் பரோட்டா செய்து ருசிக்கப் போகிறோம்.

கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு சத்துகள் அடங்கிய பன்னீரை வீட்டிலேயே மிக சுலபமாக தயாரிக்கலாம். அந்த பன்னீருக்கு தாளிதம் செய்து அந்த `ஸ்டப்பிங்கை` கோதுமை மாவில் பிசைந்த சப்பாத்தியின் உள்ளே வைத்து சுவையாக பன்னீர் பரோட்டா செய்யலாம். இது மிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1
எண்ணை – 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு கப்
வெண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

* பாலை நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சவும்.

* கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரித்து மேலும் சற்று கொதிக்கவிட்டு பால் முழுக்க திரிந்தவுடன் உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.

* வடிகட்டியின் மேலே தங்கி உள்ள பன்னீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பன்னீர் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

* அந்த தாளிதத்தை நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* கோதுமை மாவு, உப்பு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை சிறு சப்பாத்திகளாகத் திரட்டி ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு பன்னீர் உருண்டையை வைத்து மூடி பரோட்டாவாக திரட்டவும்.

* ஆய்ந்த கொத்தமல்லித் தழைகளின் மேலே அந்த பரோட்டாக்களை ஒரு முறை புரட்டி எடுக்கவும்.

* தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் சிறிது வெண்ணை ஊற்றி சுட வைத்து பன்னீர் பரோட்டாவை போட்டு சுற்றிலும் வெண்ணை ஊற்றி நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு

* ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பன்னீரைத் துருவியும் உபயோகிக்கலாம்.

* இந்த பன்னீர் பரோட்டாவிற்கு தயிர் அல்லது ஊறுகாய் நல்ல சைடு டிஷ் ஆகும்.
 
 

இறால் அவரைக்காய் மசாலா

 


தேவையான பொருட்கள்

இறால் – 1/4 கிலோ
அவரைக்காய் – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
பூண்டு – 6 பல்
புளி – கோலியளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து


செய்முறை

* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். அவரைக்காயை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

* பின்பு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இவை முக்கால் பாகம் வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து வதக்கி நீர் தெளித்து சிறிது வேகவிடவும்.

* பின்பு இறாலைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

* புளிக்கரைசல் ஊற்றி மசாலா வெந்து, கறிக்கலவையுடன் சேர்ந்ததும் உலர்ந்த பதத்தில் இறக்கவும்.


***

படத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.... இறால்க்காக இட்ட படம்

***

பீன்ஸ் உசிலி


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

வெண்டைக்காய் மசாலா


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 10
பெரிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவித் துடைத்து, நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும். காய் உடையக்கூடாது. காம்பு, மற்றும் முனையை அப்படியே வைத்து நடுவில் கீறினால் போதும். வெண்டைக்காய் மிக நீளமாய் இருந்தால், குறுக்கே இரண்டாக வெட்டி, ஒவ்வொருத் துண்டையும் இலேசாகக் கீறிக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் வேர்க்கடலையைப் போட்டு, சற்று சூடாகும் வரை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலையையும் போட்டு சற்று வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின், கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இலேசாக வதங்கினால் போதும். அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் சிறிது வதக்கவும். கடைசியில் தேங்காய், வேர்க்கடலைப் பொடியைத்தூவிக் கிளறி, இறக்கி ஆறவைக்கவும்.

கிளறி வைத்துள்ள மசாலாப்பொடியை ஒவ்வொரு வெண்டைக்காய் துண்டையும் இலேசாகப் பிளந்து, அதனுள் திணிக்கவும். மசாலாப் பொடி மீந்து விட்டால், அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு தேய்க்கவும். அதன் மேல் வெண்டைக்காய் துண்டுகளை, ஒன்றின் மேல் ஒன்று படாமல் தனித்தனியாக அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலாப்பொடியை, அடுக்கி வைத்துள்ள காயின் மேல் பரவலாகத் தூவவும். ஒரு மூடி போட்டு காயை மூடி வைக்கவும். (இட்லிபானை மூடி பொருத்தமாக இருக்கும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, தோசைத்திருப்பியால், ஒவ்வொரு துண்டையும் திருப்பிப்போட்டு, மீண்டும் மூடி வைத்து வேக விடவும். காய் நிறம்மாறி வேகும் வரை, இவ்வாறே திருப்பி திருப்பி போடவும். காய் நிறம்மாறி வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, திறந்து வைத்து, காய் நன்றாக சிவக்கும் வரை திருப்பிப் போட்டு வேக விடவும்.

குறிப்பு: கரம் மசாலா வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விடலாம். அதற்குப் பதில் பெருங்காய்த்தூளைச் சேர்க்கலாம். வேர்க்கடலைக்குப் பதில், எள்ளை உபயோகித்தும் மசாலாப்பொடி செய்யலாம்.

கீரை கட்லட்


தேவையானப்பொருட்கள்:

கீரை - 1 கட்டு (எந்த கீரையையும் பயன்படுத்தலாம்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தங்கள் சுவைக்கேற்றவாறு
எண்ணை - 5 முதல் 6 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ளக் கீரையைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும். கீரை சற்று ஆறியதும் அத்துடன் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசையவும். கைகளைத் தண்ணீரில் தொட்டுக் கொண்டு (அப்பொழுதுதான் கைகளில் ஒட்டாமல் இருக்கும்) எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி பின்னர் சற்று அழுத்தி வடை போல் தட்டிக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை விட்டு தேய்த்துக் கொள்ளவும். அதில் தட்டி வைத்திருக்கும் கட்லட்டை (4 அல்லது 5 அல்லது கல்லில் இடம் இருக்கும் வரை) ஒன்றுடன் மற்றொன்று படாமல் வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கட்லட்டைச் சுற்றி 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணை விடவும். ஒரிரு நிமிடங்கள் பொறுத்து, தோசைத் திருப்பியால் திருப்பி விட்டு, மீண்டும் சிறிது எண்ணையை சுற்றி விட்டு வேக விடவும். கட்லட் நன்றாக இருபுறமும் சிவக்கும் வரை திருப்பி திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.

பின்குறிப்பு: இதை எந்த வித சாத வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். ரசம், மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக் கொள்ள மேலும் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய் வறுவல்


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 10 முதல் 15 வரை
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி துடைத்து விட்டு நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றைப் போட்டு கைகளால் நன்றாகக் கிளறி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெண்டைக்காயின் பிசுக்குத் தன்மையிலேயே மாவு காயின் மேல் ஒட்டிக் கொள்ளும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, அதில் ஒரு கை வெண்டைக்காய் கலவையை எடுத்து தனித்தனியாக உதிர்த்து விடவும். மிதமான தீயில் அடுப்பை வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பூண்டு வெங்காயக் கார குழம்பு

 

தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 8 முதல் 10 வரை
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கச கசா - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு (2")

தாளிக்க:

நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணையை சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வரும் பொழுது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு மீண்டும் கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு சுவையுடன் சற்று காரமான இந்தக் குழம்பு, குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.