செவ்வாய், 18 அக்டோபர், 2011

குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!




குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது… சுகாதாரமானது!
குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

 குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது.

குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும்.

‘ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது’ என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும்.

குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.

குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக