திங்கள், 28 மே, 2012

பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"!





நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது. 

அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது. 

ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

அநேகம்பேர் அவ்வளவாக சீண்டாத மற்றும் ஏழைகளின் பழமாக கருதப்படுகிற கொய்யா பழம்தான், அதிக 'ஆண்டாக்ஸிடென்ட்'(உடலில் செல்களை புதுப்பிக்கும் திறன்)கொண்ட, பழங்களின் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்வதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் கிடைக்கும் பழங்களை வைத்துக்கொண்டு அண்மையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது. 

இமாச்சல் ஆப்பிள் மற்றும் மாதுளம்பழம்,தென்னிந்திய பகுதி வாழைப்பழம், மகாராஷ்ட்ரா திராட்சை மற்றும் இந்தியா முழுவதும் பரவலாக கிடைக்கக்கூடிய கொய்யா பழம் ஆகியவை இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதில் மற்ற அனைத்து பழங்களுடன் ஒப்பிடுகையில், கொய்யாவில்தான் அதிக'ஆண்டாக்ஸிடென்ட்'இருப்பதாக தெரியவந்துள்ளது. 

மேலும் பிளம்ஸ் பழம்,இந்தியர்களால் மிகவும் விரும்பப்படும் மாம்பழம் மற்றும் சீதா பழம் ஆகிய பழங்களும் கூட கொய்யா பழத்திற்கு பின்னால்தான் நிற்கின்றன. 

அந்த அளவிற்கு கொய்யா பழத்தின் ராஜாங்கம் முன்னிலையில் இருக்கிறது.



100 
கிராம் கொய்யா பழத்தில் 500 மில்லி கிராம் அளவுக்கு ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது. அதுவே பிளம்ஸ் பழத்தில் 330 மி.கி., மாதுளம்பழத்தில் 135 மி.கி., ஆப்பிள் பழத்தில் 125 மி.கி, வாழைப்பழத்தில் 30 மி.கி. அளவு மட்டுமே 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

அதேப்போன்று தர்பூசணி மற்றும் அன்னாசி பழத்திலும் மிகக்குறைந்த அளவே 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது. அதேப்போன்று மாம்பழத்தில் 170 மி.கி. 'ஆண்டாக்ஸிடென்ட்' உள்ளது.

ஆனால் கொய்யாவில் அதிக அளவு 'ஆண்டாக்ஸிடென்ட்' மற்றும் நார்சத்து உள்ளது.

எனவே விலை மலிவாக இருக்கிறதே என்று கொய்யா பழத்தை அலட்சியப்படுத்தாமல் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு பழமாவது சாப்பிட்டு வரலாம் என்று கூறும் டாக்டர் ஸ்ரீராமுலு, "An apple a day keeps the doctor away" என்பதற்கு பதிலாக "A guava a day keeps the doctor away", அதாவது " தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்!" என்பதற்கு பதிலாக" தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்!" என்று புதுமொழி படைக்கலாம் என்கிறார்...! 

அதே சமயம் சளித் தொல்லைக்கு ஆளானவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் சிலருக்கு கொய்யா பழம் "அலர்ஜி" எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்களும் இதை தவிர்த்துவிட வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக