வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பன்னீர் பரோட்டா



சாதம் பல வகைகளில் செய்கிறோம். மாவு உணவுகள் பல விதமாக தயாரிக்கிறோமா என்றால் குறைவுதான். நாம் இந்த முறை கற்றுக் கொள்ள இருப்பது புதிய வகை மாவு உணவுதான். கோதுமை மாவுடன், பன்னீர் சேர்த்து சுவையான பன்னீர் பரோட்டா செய்து ருசிக்கப் போகிறோம்.

கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு சத்துகள் அடங்கிய பன்னீரை வீட்டிலேயே மிக சுலபமாக தயாரிக்கலாம். அந்த பன்னீருக்கு தாளிதம் செய்து அந்த `ஸ்டப்பிங்கை` கோதுமை மாவில் பிசைந்த சப்பாத்தியின் உள்ளே வைத்து சுவையாக பன்னீர் பரோட்டா செய்யலாம். இது மிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1
எண்ணை – 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு கப்
வெண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

* பாலை நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சவும்.

* கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரித்து மேலும் சற்று கொதிக்கவிட்டு பால் முழுக்க திரிந்தவுடன் உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.

* வடிகட்டியின் மேலே தங்கி உள்ள பன்னீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பன்னீர் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

* அந்த தாளிதத்தை நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* கோதுமை மாவு, உப்பு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை சிறு சப்பாத்திகளாகத் திரட்டி ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு பன்னீர் உருண்டையை வைத்து மூடி பரோட்டாவாக திரட்டவும்.

* ஆய்ந்த கொத்தமல்லித் தழைகளின் மேலே அந்த பரோட்டாக்களை ஒரு முறை புரட்டி எடுக்கவும்.

* தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் சிறிது வெண்ணை ஊற்றி சுட வைத்து பன்னீர் பரோட்டாவை போட்டு சுற்றிலும் வெண்ணை ஊற்றி நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு

* ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பன்னீரைத் துருவியும் உபயோகிக்கலாம்.

* இந்த பன்னீர் பரோட்டாவிற்கு தயிர் அல்லது ஊறுகாய் நல்ல சைடு டிஷ் ஆகும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக