சனி, 30 ஜூலை, 2011

கோடையிலும் முகம் பளபளக்க ..

 

"பியூட்டி பார்லருக்கு" செல்லாமல், நம் வீட்டு சமையலறை மற்றும் ஃபிரிட்ஜ்லிருக்கும் தயிர், வெண்ணெய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள், குங்குமப்பூ போன்ற பொருட்களை பயன்படுத்தியே நமது முகத்தை அழகு படுத்திக் கொள்ளலாம்.
 
அதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக....
 
* தயிருடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வர, முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். எலுமிச்சை பழத் தோலை காய வைத்து, அதை அரைத்து அந்த பொடியையும் இதனுடன் சேர்த்து முகத்தில் தடவலாம்.
* வெள்ளரிக்காயின் சதைப்பகுதியுடன் தயிர் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இது, ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.
* வெள்ளரிக்காய், பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி ஆகியவற்றை தயிருடன் சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வர முகம் பட்டு போல ஜொலிக்கும்.
* பச்சரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, இதை தயிரில் குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவ, முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாமுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வர, முகம் பொலிவுறும்.
 
* கை முட்டிப் பகுதி சிலருக்கு, கறுப்பாக காணப்படும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதை கை முட்டிப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வர, கறுமை மறையும். அதே போல், காப்பித் தூளுடன், சர்க்கரை சேர்த்தும் தேய்க்கலாம்.
* முலாம்பழத்தை சாறெடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர முகம் பொலிவு பெறும்.
* தர்ப்பூசணி பழச் சாறெடுத்து, அதை முகத்தில் பூச வேண்டும். அது காய்ந்து நன்கு இறுக்கமானது தெரிந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகம் பளபளப்பாக காணப்படும். இந்த, "பேஸ் மாஸ்க்"கை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
* மாம்பழச் சாறை பஞ்சால் முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக