சமையல் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜனவரி, 2013

சிக்கன் மஞ்சூரியன்......




*தேவையான பொருட்கள்*

எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டைஒன்று
கார்ன்ப்ளவர் - 6 மேசைக்கரண்டி
மைதா – 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுகால் கப்
பூண்டு குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி

*மஞ்சூரியன் செய்முறை*

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ்அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.

பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு
கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். நீங்களும் செய்து பார்த்து அசத்துங்களேன்.

புதன், 26 டிசம்பர், 2012

சத்தான நெல்லிக்காய் ஊறுகாய்



  

நெல்லிக்காய் வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. இதில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதனை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வெயில் காலத்தில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். சத்தாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்அரை கிலோ
வரமிளகாய் : 30 கிராம்
உப்புஒரு கை பிடி அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 150 மிலி
பெருங்காயத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெந்தையம் – 2 டீ ஸ்பூன்
கடுகு - 3 டீ ஸ்பூன்

ஊறுகாய் செய்முறை


நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் கொதிக்கிற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்கவும்.

உப்பு, வர மிளகாயை காயவைத்து பொடி செய்து நெல்லிக்காயில் சேர்த்துக் கலக்கவும்.

நல்லெண்ணையில் கடுகு, வெந்தையம் பெருங்காயம் தாளித்துக் கொட்டி, நன்றாக கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.

கிலோ கணக்கில் நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய்த் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை. நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும்.

வெள்ளி, 1 ஜூன், 2012

KFC சிக்கன்



தேவையானப் பொருட்கள்

    ஊற வைக்க:
    எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள்   போட்டது) () லெக் பீஸ் - ஒரு கிலோ
    வெங்காயம் - ஒன்று (பெரியது)
    தக்காளி- ஒன்று (பெரியது)
    இஞ்சி - மூன்று அங்குல துண்டு
    பூண்டு - ஆறு பல்
    பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    டிப் செய்து பொரிக்க:
    மைதா - ஒரு கப்
    கார்ன் ப்ளார் - கால் கப்
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - அரை தேக்கரண்டி
    எண்ணெய் + பட்டர் - பொரிக்க தேவையான அளவு


வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
   
இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.
   
டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.
   
வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.

வியாழன், 31 மே, 2012

கேரளா நண்டு குழம்பு



தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் - 2
மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் - 3ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் - 1
தயிர் - 1/2கப்
கறிவேப்பிலை
அரைத்த தேங்காய் விழுது - 3ஸ்பூன் அல்லது தேங்காய் பால் -1/2 கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு


முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,பெருஞ்சிரகத்தூள், சிறிது தயிர், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
காடாயில் நன்றாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்களி சேர்த்து நன்றாக வதக்கவும்

பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். விருப்பபட்டால் மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

நண்டு வறுவல்


 

தேவையான பொருள்கள்:

வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

  

செய்முறை:

நண்டை கால்கள் தனியாகவும், உடல் பாகம் தனியாகவும் எடுத்து விட்டு
சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

ஒரு வெங்காயம் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து
கொள்ளவேண்டும்.

எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது போடவும்.

வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், அரைத்து
வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கி நண்டுகளை போட்டு மசாலா
கலந்து வரும்படி கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

நண்டு வெந்து கிரேவியாக வரும் போது இறக்கவும்..

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஃபிரைடு ரைஸ்

vegetable-fried-rice
Vegetable Fried Rice

 

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 1 கப்
வெண்ணை/ எண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
முட்டைக்கோஸ் – 50 கிராம்
கேரட் – 2
குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – தலா 1
வெள்ளை மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சைவ அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
சில்லி வினிகர் – 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை
அடிகனமான வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் வெண்ணை அல்லது எண்ணெய்யை ஊற்றி லேசான தீயில் பாசுமதி அரிசியை சற்று வாசனை வர வறுக்கவும்.வறுத்த அரிசியை குக்கரில் இட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டதும் உதிரி உதிரியாக சமைத்து தனியே எடுத்து வைக்கவும்.அனைத்துக் காய்களையும் நீட்டமாக, மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். அடிகனமான பெரிய வாணலியில் வெண்ணை அல்லது எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது,வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்.
பிறகு அரிந்த காய்கள்,வெள்ளை மிளகுத்தூள்,உப்பு சேர்த்து வாணலியில் போட்டு வாணலியை கைகளால் குலுக்கியபடி காய்களை அரை வேக்காடாக வதக்கவும். பின்பு வடித்த பாசுமதி அரிசி சாதம்,சோயா சாஸ்,சில்லி வினிகர்,சில்லி சாஸ்,சைவ அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து அரிசி சாதம் உடையாமல் நன்கு கலந்து சிறிது வதக்கி அடுப்பை அணைக்கவும்.

* பொடியாக அரிந்த வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

சில்லி பரோட்டா


தேவையான பொருட்கள் : 
  •   மைதா – 1 கப் (200 கிராம்),
  •   பெரிய வெங்காயம் – 1,
  •   குட மிளகாய் – 1,
  •   மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
  •   சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
  •   தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
  •   சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
  •   இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
  •   எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
  •   சர்க்கரை – 1 தேக்கரண்டி,
  •  உப்பு – தேவையான அளவு.

  
செய்முறை : 

 * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.

* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* ரொம்ப மெலிதாகவோ, மொத்த மாகவோ இல்லாமல் சப்பாத் திகளாக தே ய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.

* தோசைக்கல்லை காய வைத்து, சப் பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.

* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

முருங்கக்காய் கார குழம்பு (செட்டிநாடு)


Drumstick (muranka) pieces, onion, coconut-ginger paste and tomato
தேவையான பொருட்கள்:
========================

புளி - எலுமிச்சை அளவு
முருங்கக்காய் துண்டுகள் - பத்து
சின்ன வெங்காயம் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
தக்காளி - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஐந்து (optional)
நல்லெண்ணெய் - இரண்டு குழிகரண்டி +அரை குழிகரண்டி
கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

அரைக்க:
========
சோம்பு பொடி - கால் டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - கால் கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஐந்து இலை


செய்முறை:

* வெங்காயத்தை தோலுரித்து கொள்ளவும்,

* பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்.

* புளியை மூன்று கப் நீரில் கரைத்து கொள்ளவும்.

* அரைக்க வேண்டியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* பாத்திரத்தில் இரண்டு குழிகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பொறிய விடவும்.

* சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி முருங்கக்காய் சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தக்காளி ,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொத்தி வந்ததும் மீதும் உள்ள எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

* சுவையான கார குழம்பு தயார்.



குறிப்பு:
=======

உங்கள் நாவிற்கு தகுந்தாற்போல் காரத்தை கூட குறைத்து போட்டு கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயம் உரிக்கும் பொழுது கண் எறியாமல் இருக்க ஒரு பத்து நிமிடம் முன்பு தண்ணீரில் ஊற போட்டு விடுங்கள்.எளிதாக தோல் நீக்கிவிட முடியும் அதே சமயம் கண் எறியாது.

நண்டு வறுவல்





தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கோப்பை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

5. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

7. பிறகு இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

8. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

9. இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.

10. பிறகு தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

11. நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


குறிப்பு

1. நண்டை ஓடு நீக்கி கழுவியதும் சிறிது நேரத்தில் சமைத்து விடவும். இல்லையென்றால் நண்டு உள்ளே குழைந்து விடும்.

2. இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி அதிகமாகவும், பூண்டு குறைவாகவும் சேர்த்து அரைக்கவும்.

3. தேங்காய் விழுதுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

செட்டிநாட்டு இறால் வறுவல்



தேவையானப் பொருட்கள்

இறால் - 1/4 கிலோ கிராம்
வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )
பூண்டு - 10 பெரிய பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2 பழம்
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு விரலளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கையளவு
வத்தல் மிளகாய் - 20 பெருசு


பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக்கொள்ளவும் , வெங்காயம் நீளவாக்கில் வெட்டிக்கொளவும்.

தோல்,ஓடு நீக்கிய இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். ( தூயா அளவுக்கு ரொம்ப கழுவினால் இறால் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது :P )

தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தங்காளியை துண்டங்களாக்கி போட்டு வதக்கவும்.

இறாலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். அப்படியே மறக்காமல் கொஞ்சமா தண்ணி ( குடிக்கிறதுதாங்க, அடிக்கிறது இல்லை ;) ) விட்டு அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் தேங்காய், வத்தல் கூட்டணியையும் சேர்த்து நீர் வற்றும் வரை கிளறவும்.

இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணைவிட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளிக்கவும், தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

நண்டு கறி



சமைக்கும் நேரம் = 30 நிமிடங்கள்
அளவு = 5 நபர்களுக்கு

தேவையானப் பொருட்கள்:
6 நண்டு
1/4 தேங்காய்
1/2 கோப்பை தயிர்
2 வெங்காயம்-
2 தக்காளி
1/2 தே.க இஞ்சி அரைத்தது
1/2 தேக உள்ளி அரைத்தது
2 பச்சைமிளகாய்
6 செத்தல்
1 மே.க மல்லித்தூள்
1 தே.க மஞ்சள்த்தூள்
1 தே.க மிளகு
1 தே.க சீரகம்
4 கராம்பு
1 பட்டை கறுவா
1/2 கோப்பை எண்ணெய்
1 கொத்து கறிவேப்பிலை


செய்முறை:
  1. நண்டை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  2. தேங்காயை துறுவி, சட்டியில் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் செத்தல், மல்லித்தூள்,மிளகு சீரகம்,பட்டை,கராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  4. இவற்றுடன் தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. சட்டியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  6. பின்னர் இஞ்சி உள்ளி, பச்சைமிளகாய்,தக்காளி,மஞ்சள்த்தூள் போட்டு வதக்கவும்.
  7. பிறகு அரைத்த கலவையை போட்டு வதக்கி தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. பிறகு உப்பை போட்டு நண்டை போட்டு கிளறி விடவும்.
  9. இறுதியாக 2 கோப்பை தண்ணி சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கிவிடவும்.

பால் அப்பம்

 


1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்

1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்

1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்

குவித்து ஒரு தேக்கரண்டி சீனி

பெரிய பாதித் தேங்காய்

1 தே.க. உப்புத்தூள்

1/3 தே.க. அப்பச்சோடா

*

பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்சூடாகவுள்ள நீரினுள் வைத்து, 12 மணி நேரம் புளிக்கவிடவும். இளஞ்சூடு சற்று நேரமாகிலும் பிடிக்காவிட்டால் மா புளிக்கவேமாட்டாது.

மா புளித்தவுடன், தேங்காயைத் துருவி, சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இரண்டு தரம் பாலைப் பிழிந்து, தடித்த பாலாக 1/3 சுண்டுவரை எடுத்து வேறாக வைத்துக் கொள்க. மறுபடியும் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு 2-3 தரம் பிழிந்து, 3/4 சுண்டு வரையிலான பால் எடுத்து, மாவில் விட்டு, உப்பு, அப்பச்சோடா என்பவற்றையும் போட்டு, நன்றாகக் கரைத்துக்கொள்க.

பின்னர் ஒரு பழகிய அப்பத்தாச்சியை (seasoned pan) மிதமாக எரியும் அடுப்பின்மீது வைத்து, காய்ந்தவுடன், ஒரு துணிப் பொட்டணத்தை நல்லெண்ணையில் தொட்டு, தாச்சியின் உட்புறம் முழுவதிலும் இலேசாகத் தேய்த்துப் பூசி, 4 மேசைக்கரண்டியளவு மாவை ஒரு கரண்டியினால் அள்ளி வார்க்கவும். வார்த்தவுடன் தாச்சியைத் தூக்கி, சற்றுச் சரித்து, ஒருமுறை வட்டமாகச் சிலாவி விட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, வேறாக வைத்த தடித்த தேங்காய்ப்பாலில் 2 தேக்கரண்டியளவை நடுவில் பரவலாக விட்டு, ஒரு இறுக்கமான மூடியினால் மூடி வேகவிடவும். "சிலுசிலு" என்று மூடியிலிருந்து நீர் சொட்டும் சத்தம் கேட்டவுடன் திறந்து பார்த்து, வெந்த அப்பத்தை ஒரு தட்டகப்பையினால் எடுத்து. ஒரு பெரிய தாம்பாளத்தில் சுற்றிவர அடுக்கி வரவும். பால் அப்பிக்கொள்ளாதபடி, ஒன்றினது ஓரம் மரத்தின்மீது படியும்படி வைத்து, இன்னொரு தாம்பாளத்தினால்மூடி விடவும்.

குறிப்பு: ஒரு அப்பம் வேகுவதற்கு 2 ½-3 நிமிடங்கள் வரை செல்லும். செம்மையாகச் சுடப்பட்ட அப்பம் வாசனையாகவும், அழகாகவும் இருக்கும். இதன் ஓரம் மொறமொறப்பாகவும், பொன்னிறமாகவும் இருக்கும்; நடுவில் துவாரங்கள் விழுந்து, துவாரங்கள் தடித்த பாலில் தோய்ந்திருக்கும்.

கரைத்த மா அதிக தடிப்பாக இருந்தால், அப்பத்தின் ஓரம் மட்டை போலவும், நடுப்பாகம் கனமாகவும் இருக்கும். தண்ணீர் கூடிவிட்டால், ஓரம் உடைந்து மாவாகி விடுவதுடன், நடுப்பாகமும் களிபோல இருக்கும். எனவே, அப்பத்திற்கான மாவை அவதானமாகக் கரைத்தல் வேண்டும்.

அப்பச்சோடாவைக் கட்டுமட்டாகப் பாவித்தல் வேண்டும். கூடினால், அப்பம் மஞ்சள் நிரமடைவதுடன், ஒருவித வாடையும் வீசும். முதலில் இதனைக் கொஞ்சமாக போட்டுக் கரைத்து, ஒரு அப்பத்தைச் சுட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தேவைப்படி போட்டுக்கொள்க.

அப்பத்தை இளஞ்சூடாக, வெறுமனே, அல்லது கட்டைச்சம்பல், சீனிசம்பல், சம்பலுடன் பரிமாறலாம்
 
 

பன்னீர் பரோட்டா



சாதம் பல வகைகளில் செய்கிறோம். மாவு உணவுகள் பல விதமாக தயாரிக்கிறோமா என்றால் குறைவுதான். நாம் இந்த முறை கற்றுக் கொள்ள இருப்பது புதிய வகை மாவு உணவுதான். கோதுமை மாவுடன், பன்னீர் சேர்த்து சுவையான பன்னீர் பரோட்டா செய்து ருசிக்கப் போகிறோம்.

கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு சத்துகள் அடங்கிய பன்னீரை வீட்டிலேயே மிக சுலபமாக தயாரிக்கலாம். அந்த பன்னீருக்கு தாளிதம் செய்து அந்த `ஸ்டப்பிங்கை` கோதுமை மாவில் பிசைந்த சப்பாத்தியின் உள்ளே வைத்து சுவையாக பன்னீர் பரோட்டா செய்யலாம். இது மிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1
எண்ணை – 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு கப்
வெண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

* பாலை நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சவும்.

* கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரித்து மேலும் சற்று கொதிக்கவிட்டு பால் முழுக்க திரிந்தவுடன் உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.

* வடிகட்டியின் மேலே தங்கி உள்ள பன்னீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பன்னீர் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

* அந்த தாளிதத்தை நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* கோதுமை மாவு, உப்பு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை சிறு சப்பாத்திகளாகத் திரட்டி ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு பன்னீர் உருண்டையை வைத்து மூடி பரோட்டாவாக திரட்டவும்.

* ஆய்ந்த கொத்தமல்லித் தழைகளின் மேலே அந்த பரோட்டாக்களை ஒரு முறை புரட்டி எடுக்கவும்.

* தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் சிறிது வெண்ணை ஊற்றி சுட வைத்து பன்னீர் பரோட்டாவை போட்டு சுற்றிலும் வெண்ணை ஊற்றி நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு

* ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பன்னீரைத் துருவியும் உபயோகிக்கலாம்.

* இந்த பன்னீர் பரோட்டாவிற்கு தயிர் அல்லது ஊறுகாய் நல்ல சைடு டிஷ் ஆகும்.
 
 

இறால் அவரைக்காய் மசாலா

 


தேவையான பொருட்கள்

இறால் – 1/4 கிலோ
அவரைக்காய் – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
பூண்டு – 6 பல்
புளி – கோலியளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து


செய்முறை

* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். அவரைக்காயை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

* பின்பு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இவை முக்கால் பாகம் வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து வதக்கி நீர் தெளித்து சிறிது வேகவிடவும்.

* பின்பு இறாலைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

* புளிக்கரைசல் ஊற்றி மசாலா வெந்து, கறிக்கலவையுடன் சேர்ந்ததும் உலர்ந்த பதத்தில் இறக்கவும்.


***

படத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.... இறால்க்காக இட்ட படம்

***

பீன்ஸ் உசிலி


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 2" அளவிற்கு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விருப்பமானால்)
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள பீன்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், சிறிது உப்பு போட்டு, சிறிது நீரைத் தெளித்து வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் அதில் வேக வைத்தக் காயைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

வெண்டைக்காய் மசாலா


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 10
பெரிய வெங்காயம் - 1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவித் துடைத்து, நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும். காய் உடையக்கூடாது. காம்பு, மற்றும் முனையை அப்படியே வைத்து நடுவில் கீறினால் போதும். வெண்டைக்காய் மிக நீளமாய் இருந்தால், குறுக்கே இரண்டாக வெட்டி, ஒவ்வொருத் துண்டையும் இலேசாகக் கீறிக்கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் வேர்க்கடலையைப் போட்டு, சற்று சூடாகும் வரை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவலையையும் போட்டு சற்று வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின், கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இலேசாக வதங்கினால் போதும். அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் சிறிது வதக்கவும். கடைசியில் தேங்காய், வேர்க்கடலைப் பொடியைத்தூவிக் கிளறி, இறக்கி ஆறவைக்கவும்.

கிளறி வைத்துள்ள மசாலாப்பொடியை ஒவ்வொரு வெண்டைக்காய் துண்டையும் இலேசாகப் பிளந்து, அதனுள் திணிக்கவும். மசாலாப் பொடி மீந்து விட்டால், அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு தேய்க்கவும். அதன் மேல் வெண்டைக்காய் துண்டுகளை, ஒன்றின் மேல் ஒன்று படாமல் தனித்தனியாக அடுக்கி வைக்கவும். மீதமுள்ள மசாலாப்பொடியை, அடுக்கி வைத்துள்ள காயின் மேல் பரவலாகத் தூவவும். ஒரு மூடி போட்டு காயை மூடி வைக்கவும். (இட்லிபானை மூடி பொருத்தமாக இருக்கும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து, தோசைத்திருப்பியால், ஒவ்வொரு துண்டையும் திருப்பிப்போட்டு, மீண்டும் மூடி வைத்து வேக விடவும். காய் நிறம்மாறி வேகும் வரை, இவ்வாறே திருப்பி திருப்பி போடவும். காய் நிறம்மாறி வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, திறந்து வைத்து, காய் நன்றாக சிவக்கும் வரை திருப்பிப் போட்டு வேக விடவும்.

குறிப்பு: கரம் மசாலா வாசனைப் பிடிக்காதவர்கள், அதைத் தவிர்த்து விடலாம். அதற்குப் பதில் பெருங்காய்த்தூளைச் சேர்க்கலாம். வேர்க்கடலைக்குப் பதில், எள்ளை உபயோகித்தும் மசாலாப்பொடி செய்யலாம்.

கீரை கட்லட்


தேவையானப்பொருட்கள்:

கீரை - 1 கட்டு (எந்த கீரையையும் பயன்படுத்தலாம்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தங்கள் சுவைக்கேற்றவாறு
எண்ணை - 5 முதல் 6 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ளக் கீரையைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும். கீரை சற்று ஆறியதும் அத்துடன் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசையவும். கைகளைத் தண்ணீரில் தொட்டுக் கொண்டு (அப்பொழுதுதான் கைகளில் ஒட்டாமல் இருக்கும்) எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி பின்னர் சற்று அழுத்தி வடை போல் தட்டிக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை விட்டு தேய்த்துக் கொள்ளவும். அதில் தட்டி வைத்திருக்கும் கட்லட்டை (4 அல்லது 5 அல்லது கல்லில் இடம் இருக்கும் வரை) ஒன்றுடன் மற்றொன்று படாமல் வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கட்லட்டைச் சுற்றி 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணை விடவும். ஒரிரு நிமிடங்கள் பொறுத்து, தோசைத் திருப்பியால் திருப்பி விட்டு, மீண்டும் சிறிது எண்ணையை சுற்றி விட்டு வேக விடவும். கட்லட் நன்றாக இருபுறமும் சிவக்கும் வரை திருப்பி திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.

பின்குறிப்பு: இதை எந்த வித சாத வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். ரசம், மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக் கொள்ள மேலும் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய் வறுவல்


தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 10 முதல் 15 வரை
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி துடைத்து விட்டு நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றைப் போட்டு கைகளால் நன்றாகக் கிளறி விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வெண்டைக்காயின் பிசுக்குத் தன்மையிலேயே மாவு காயின் மேல் ஒட்டிக் கொள்ளும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்து, அதில் ஒரு கை வெண்டைக்காய் கலவையை எடுத்து தனித்தனியாக உதிர்த்து விடவும். மிதமான தீயில் அடுப்பை வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பூண்டு வெங்காயக் கார குழம்பு

 

தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 8 முதல் 10 வரை
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கச கசா - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு (2")

தாளிக்க:

நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணையை சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வரும் பொழுது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு மீண்டும் கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு சுவையுடன் சற்று காரமான இந்தக் குழம்பு, குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கத்திரிக்காய் மசாலா குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 அல்லது 6 (ஒரே அளவான சிறிய கத்திரிக்காய்)
புளி - எலுமிச்சம் பழ அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 அல்லது 5 பற்கள்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 2 அல்லது 3


தாளிக்க:

பட்டை - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காயை நான்காகக் கீறி விட்டு, அடிபாகத்தை வெட்டாமல் முழுதாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா, முந்திரி ஆகியவற்றை, சிறிது நீர் தெளித்து நன்றாக அரைத்து, அரைத்த மிக்ஸியையும் கழுவி அதையும் விழுதுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் பட்டையைப் போட்டு பொரிக்கவும். பின் அதில் கடுகு, சோம்பு போட்டு, கடுகு வெடித்தவுடன், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் வதக்கியபின் அதில் தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விடவும். அதன் பின் அதில் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தேவையான அளவு சிறிது தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதி வந்து, கத்திக்காயும் நன்றாக வெந்தவுடன், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

இதில் கத்திரிக்காயிற்குப் பதில் உருளைக் கிழங்கைச் சேர்த்தும் செய்யலாம். அல்லது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் இரண்டையும் சேர்த்து செய்யலாம். மசாலா வாசனை பிடித்தவர்களுக்கு இந்த குழம்பு மிகுந்த சுவையாயிருக்கும்.