திங்கள், 2 பிப்ரவரி, 2015

கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை

மாதவிலக்காவது, அதைத் தொடர்ந்து திருமணமாகி குழந்தை பெறுவது என இந்த இரண்டுமே கருப்பையின் மாபெரும் வேலைகள் என்பது பெரும்பாலான பெண் களின் நினைப்பு. அதனால்தான் முன்பெல்லாம் கர்ப்பப் பையில் சின்ன பிரச்னை என்றால்கூட சர்வசாதாரணமாக அறுவை சிகிச்சையில் அதை வெட்டி எறிந்து விட்டு வேறு வேலையைப் பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் இருந்தது.

விஞ்ஞானமும், மருத்துவமும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் கருப்பையை அகற்றாமலேயே பிரச்சினைகளை மட்டும் குணப்படுத்த முடியும். கருப்பையில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கான அதை நீக்காமல் செய்யக்கூடிய தீர்வுகள் பற்றியும், தவிர்க்க முடியாமல் கருப்பை அறுவை சிகிச்சை  செய்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். கருப்பையில் உண்டாகிற அனேகப் பிரச்சினைகளை இன்று கர்ப்பப்பையை அகற்றாமலேயே சரிசெய்ய முடியும்.

உதாரணத்துக்கு ஃபைப்ராயிடு கட்டி என்றால் அதை மட்டும் நீக்கும் சிகிச்சைகள் வந்து விட்டன. அதீத ரத்தப் போக்கு தொடர்பான  பிரச்சினைகளுக்கும் பிரத்யேக ஊசிகள், மெரீனா என்கிற கருத்தடைச் சாதனம் போன்றவை உதவும்.  ஹார்மோன் கோளாறு காரணமாக உண்டாகிற அளவுக்கதிக ரத்தப் போக்கை சரி செய்ய, கருப் பையின் உள்ளே உள்ள சவ்வுப் பகுதியை பொசுக்கி, அதை மெலிதாக்கும் எண்டோமெட்ரியல் அப்லேஷன் சிகிச்சை பலனளிக்கும். கர்ப்பப் பையில் கட்டியோ, சதையோ இருந்தாலும் ஹிஸ்ட்ரோஸ்கோப் மூலம் சரி செய்து விட முடியும்.

இவற்றையெல்லாம் மீறி, கருப்பையில் வேறு ஏதேனும் பெரிய பிரச்சினைகள் இருந்து, கருப்பையை நீக்குவது மட்டுமே தீர்வு என்கிற நிலையில்,  லேப்ராஸ்கோப்பி முறையில் அதை நீக்குவது தான் பாதுகாப்பானது. ஓப்பன் சர்ஜரி என்கிற வயிற்றைக் கிழித்துச் செய்கிற அறுவை சிகிச்சை  செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையிலும் இரண்டு வகைகள் உள்ளன.

ஒன்று  டிஎல்ஹெச் எனப்படுகிற டோட்டல் லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்டரெக்டமி.  இதில் முழுக்க முழுக்க லேப்ராஸ் கோப்பிக் முறையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப் படும். இன்னொன்று எல்ஏவிஹெச் எனப்படுகிற லேப்ராஸ் கோப்பிக் அசிஸ்ட் டெட் வெஜைனல் ஹிஸ்ட்ட ரெக்டமி. இதில் பாதி அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோப்பி முறை யிலும், மீதி பிறப்புறுப்பின் வழியேவும் செய்யப்படும்.

முதல் வகையில் இடுப்பெலும்புத் தசைகள் பாதிக்கப்படாது. பின்னாளில் ஏற்படுகிற சிறுநீர் கசிவு, சிறுநீரை அடக்க முடியாத நிலை, அடி இறக்கம் போன்றவை இதில் இருக் காது. இரண்டாவது வகையில் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது சிரமம்.கருப்பையை அகற்றச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தினால், அதற்கு முன் உங்கள் சினைப்பையை ஸ்கேன் செய்து பார்த்து, அவற்றின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
 

முப்பது வயதிலேயே முதுகுவலி!


புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகுவலி வரும். ஆல் கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு  நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக் கிறது. ஆரோக்கியத்தை இழந்து 30 வயதுக்குள்ளேயே மருத்துவமனைகளின் வரவேற்பறைகளில் காத்துக்  கொண்டிருக்கும் இளைஞர்கள் எக்கச்சக்கம்.

இந்த ஆரோக்கிய அச்சுறுத்தலில் முதுகுவலிக்கு முக்கிய இடம் உண்டு. உடல் உழைப்பு குறைந்ததும், கணினிக்கு முன்னால் நாள் முழுக்க அமர்ந்து இருக்கிற வேலைகளுமே முதுகுவலிக்கான காரணம் என மேலோட்டமாகப் புரிந்துகொள்ள முடியும்.

எலும்பு மற்றும் முடநீக்கு இயல் நிபுணர் சு.ரமேஷ் பாபு இது குறித்து விரிவாகப் கூறுகிறார்: கழுத்துப் பகுதி, நடுமுதுகுப் பகுதி, அடிமுதுகுப் பகுதி,  வால் பகுதி என்று நான்கு பகுதிகளாக முதுகைப் பிரிக்கலாம். இளைஞர்களிடம் பொதுவாக கழுத்து மற்றும் அடிமுதுகுப் பகுதிகளில்தான் வலிகள்  ஏற்படுகின்றன.

இந்த இரண்டு வகை முதுகுவலிகளும் உட்காரும் முறை, நடக்கும்முறை, அதிக உடல் எடை போன்ற பழக்க வழக்கங்களினாலேயே பெரும்பாலும்  ஏற்படுகின்றன. அரிதாக அலர்ஜி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நடுமுதுகுப் பகுதியிலும் வலி ஏற்படலாம்.


கழுத்து வலி ஏன் வருகிறது?

கழுத்துப் பகுதியில் மொத்தம் 7 எலும்புகள் இருக் கின்றன. இந்த எலும்புகளின் இருபுறமும் சவ்வுகளும் சின்னச் சின்ன இணைப்புகளும்  இருக்கின்றன. இதில், உடலுக்கு ஏற்படும் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பதுதான் சவ்வுகளின்  வேலை. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சவ்வில் அழுத்தம் ஏற்பட்டு கழுத்து வலி வரலாம்.

சவ்வில் அழுத்தம் அதிகமாவதால்  சவ்வு விலகி அருகில் இருக்கும் நரம்புகளைத் தொடும். இதனால் கைகளிலும் வலி ஏற்பட்டு மரத்துப் போவது, பலவீனமாக இருப்பது போன்ற  உணர்வு கைகளில் தோன்றும்.


தவிர்ப்பது எப்படி? 

படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது கூடாது. தூங்கும்போது மெலிதான தலை யணைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  ஒன்றுக்கும் அதிகமான தலையணைகள் பயன்படுத்தக் கூடாது. கழுத்துப் பகுதி, நடு முதுகுப் பகுதி, அடிமுதுகுப்பகுதி, வால் பகுதி என அந்தந்தப்  பகுதிகளுக்கு என தனிப்பட்ட பயிற்சிகள் இருக்கின்றன. மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு அதற்கான பயிற்சிகளைச் செய்யவேண்டும்.


அடிமுதுகுப் பகுதியில் வரும் வலி ஏன்? 

அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு அடிமுதுகுப் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் சவ்வு தேய்மானம் அடைந்து இடம்மாறும்.  சவ்வில் ஏற்படும் அழுத்தம் காரணமாக அடிமுதுகுப் பகுதியில் வலி வரும். இந்த வலி அடிமுதுகிலிருந்து கால்களுக்கும் பரவும். நீண்ட நேரம் நிற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த அடிமுதுகுப் பகுதி வலி அதிகமாக  ஏற்படுகிறது. இரவு நேரப் பணி, எப்போதும் ஏசியின் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டியை தரும் சூரிய ஒளி உடலில் படுவதில்லை.

எனவே, வைட்டமின் டி குறைபாடு இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியம் சத்தை உடல்  உள்வாங்கிக் கொள்வதும் குறையும். எலும்புக்கு ஆதாரமான இந்த இரண்டு சத்துகளும் குறைவதால் தசைகள் பலவீன மடைந்து அடிமுதுகில் வலி  ஏற்படும்.

நீண்ட தூரம் பயணம் செய்வதாலும் அடிமுதுகுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததும் ஒரு  முக்கியக் காரணம். சமீபத்திய ஆய்வுகளில் புகைப்பிடிப்பவர்களுக்கு சவ்வில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அடிமுதுகு வலி வருவதாகக்  கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு நலிவடைந்து வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நீண்ட தூரப் பயணங்களாக இருந்தால் ரயிலில் செல்வது சிறந்தது. பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தால், முன்பகுதி யிலேயே அமரவேண்டும்.  பின்பக்கம் சாய்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட தூரப் பயணத்துக்கு இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வேகத்தடைகளில்  நிதானமாகச் செல்வதும், பழு தடைந்த சாலைகளைத் தவிர்ப்பதும் நல்லது. சீக்கிரம் செல்லலாம் என்று குண்டும் குழியுமான குறுக்கு வழிகளைப்  பயன்படுத்துவது முதுகுவலியை வரவழைக்கும்.


முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதுகுவலி வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என்று பரிசோதனைகள் செய்து பார்த்தால் என்ன பிரச்சினை  என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
நோய்த் தொற்று, ரத்த ஓட்டத்தில் தொந்தரவு, எலும்புத் தேய்மானம், அடிமுதுகுப் பகுதியில் அரிதாக  புற்று நோய்கூட வரலாம். அதனால், வலி ஏற்பட்டால் நாமே மருந்து எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது!

ஒவ்வாமையை விரட்டும் சீரகம், புதினா



அலர்ஜி என்பது வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருள்கள் நுழையும்போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவது ஆகும். இது உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்.

உடலில் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். ஒவ்வாமையால் உடம் பில் கொப்பளம்போல் உருவாகும். அது வெடித்து புண் ணாகி அரிப்பு ஏற்பட்டு சீழ் உருவாகி காய்ச்சல் ஏற்படும்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் ஒவ்வாமை ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருள்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபின் இ என்ற எதிர்ப்பு பொருளை உற்பத்தி செய்கிறது.
இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்பு தன்மை மிகுந்த பொருள்கள் உருவாகின்றன. இதுபோன்ற வேதிப் பொருள்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற ஒவ்வாமைக்கான அறிகுறிகள் உண்டாகிறது.

பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வீட்டில் உள்ள தூசில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் தூசில் நுண்ணுயிரிகள் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள்கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவை வாயில் வைத்தவுடன் கூசும்.

முகச்சுளிப்பு கூட ஏற்படும். சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்பட லாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக் கொள்ளாமல் பிரச்சினை எற்படும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும். ஒவ் வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவை பாதிப்படையும்.

வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள் அதிக ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தை சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கச் செய்யும். முட்டை, பால், வேர்க்கடலை, கோதுமை, பாதாம் பருப்பு, மீன், நத்தை வகை போன்றவை 90 சதவீதம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை போன்றவைகளால் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.

மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும். உணவில் ஒவ்வாமை ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருள்களில் இவ்வகை புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லெட்டுகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.

பாதுகாப்பு முறைகள்
தூசு, பூக்களின் மகரந்த தூளினால் ஒவ்வாமை ஏற்படு பவர்கள் வெளியில் செல்லும்போது முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்லலாம். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் தூய்மையான முறையில் பயன்படுத்தவேண்டும்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை வாரம் ஒருமுறை சோப்பு போட்டு குளிப் பாட்டவும். வீட்டுக்கு வெளியே வைத்து அவற்றை பராமரிக் கலாம். முக்கியமாக படுக்கை அறையில் அனுமதிக்கக் கூடாது.

நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் ஒவ்வாமை வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். எனவே துணியை துவைத்த பின் பயன்படுத்தவேண்டும்.

ஒவ்வாமை பிரச்சினை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருள்களான ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாள்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இதன் மூலம் மூக்கடைப்பு உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும்.

சில சிப்ஸ் வகைகள், சீன உணவு வகைகளில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. ஒவ்வாமைக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை தவிர்ப்பதன்மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.

சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன்மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன்மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்


பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.

இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!

கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும்.

பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன.  இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது.
பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது. பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை குணப்படுத்த அளிக்கப்பட்டது.
இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக் குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி புரிகிறது.

வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.

எடை குறைக்க விரும்புவோர் இதைச் சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...


வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு  ருசி சேர்ப்பதே வெங் காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு  நிகர் ஏது?
வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப்  பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும். வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு  பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள்  உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது  இந்திய நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து  நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும்  வெங்காயத்தை பச்சையாக உண்ணு வதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து  சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச்  சாப்பிடலாம்.

உடல் பருமனைக் குறைக்க
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத்  தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல்  தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம்  உதவுகிறது.

உடல் வெப்பக் கடுப்பு அகல...
பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க  உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.

விசக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.

இருமலுக்கு...
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு  வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.

மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங் காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும்  வெங் காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது.  வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை  அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில்  நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.

உடல் அயர்வும் வலியும் நீங்க
அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி  உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.

குடல் புழுக்கள் நீங்க
குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச்  சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.