சனி, 24 செப்டம்பர், 2011

அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்

 


வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’ பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும், அதிக உடல் பருமனுடனும் இருப்பர். அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக “டிவி’ பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது. பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகள், “டிவி’யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, சத்துக் குறைவான உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

“டிவி’ நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்களது பெற்றோருடன் அமர்ந்து, “டிவி’ பார்ப்பதையே விரும்புகின்றனர்.

“ரியாலிட்டி ÷ஷா’க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர். பெரும்பாலான, “டிவி’ நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, “டிவி’ நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உணவு

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள். சிலர் பயம் காட்டுவார்கள், சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.

குழந்தைகளை மிரட்டும்போது அவர்கள் மன நெருக்கடியும், டென்சனையும் அனுபவிக்க நேரிடும். இதனால் குழந்தைகள் உணவை அறவே வெறுப்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவை வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள்.
அதுபோல் குழந்தை களுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது. தாயின் அவசரத்திற்கு தகுந்தபடி குழந்தையால் மின்னல் வேகத்தில் சாப்பிட முடியாது. சிறிதளவு உணவு கொடுத்தாலும், பொறுமை யாகவும், நிதானமாகவும் ஊட்ட வேண்டும்.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பாட்டி புராணக்கதைகள், இதிகாச கதைகள் கூறுவார்கள். குழந்தைகளும், ஓடி, ஆடி விளையாடி உணவருந்தும். ஆனால் இன்று பாட்டியும் இல்லை, கதை சொல்ல யாரும் இல்லை. தொலைக்காட்சியும், சி.டியும் தான் பாட்டியாக உள்ளது.
பொருள் தேடுவது அவசியம்தான். ஆனால் குழந்தை வளர்ப்பு அதைவிட அவசியம். குழந்தைகளை இயந்திரமாக நினைக்காமல் அவர்களை ஜீவன்களாக நினைத்து உணவு முதல் எல்லாவற்றிலும் அக்கறை எடுத்துக்கொண்டால் தான் எதிர்கால குழந்தை ஆரோக்கிய மானதாகவும், அற்புத குணம் கொண்டதாகவும் வளரும்.

ஒரு வயது ஆரம்பம் முதல் ஒருநாளைக்கு 4 முதல் 5 முறை வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

1 வயது முதல் குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் அதன் சுவையை அறியாமல் குழந்தை சாப்பிடாமல் துப்பும் அல்லது வாந்தி எடுக்கும். இதனால் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று எண்ணி பழக்கப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. பொறுமையோடு மீண்டும் மீண்டும் கொடுத்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதன் சுவை குழந்தைக்கு பிடித்து விருப்பத்தோடு சாப்பிட ஆரம்பிக்கும்.

உணவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இந்த திடமான உணவுகள் குழந்தைக்கு செரிமானம் ஆக 3 மணி நேரமாவது ஆகும். எனவே அடிக்கடி உணவைத் திணிக்கக் கூடாது.

ஆவியில் வேகவைத்த மாவு உணவுகள், அதாவது இட்லி, இடியாப்பம், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
மிளகு கலந்து குழைய வேகவைக்கப்பட்ட வெண்பொங்கல், குழைத்த சாதத்துடன், மோர், இரசம், பருப்பு, கடைந்த கீரை இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும்.

வேகவைத்து மசித்த காய்கறிகள், வேகவைத்த காரட், வேகவைத்த ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம்.

இரவில் காய்ச்சிய பால் கொடுக்க வேண்டும்.ஒன்றரை வயதுக்கு மேல் நன்கு வேகவைத்த ஆட்டிறைச்சி, ஈரல், மீன் போன்ற மாமிச உணவுகளை சிறிதளவு கொடுக்கலாம்.

சப்பாத்தி, ரொட்டி, பிரட் போன்றவற்றை குறைந்த அளவு கொடுக்கலாம்.
குழந்தைக்கு பல் முளைத்து மென்று சாப்பிடும் அளவு வந்தவுடன் வேகவைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கொடுக்க வேண்டும். காரட், காலிபிளவர், பசலை கீரை, வேகவைத்த முட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
பழத்துண்டுகள் தோல் நீக்கி கொடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றையும் கொடுக்கலாம்.

நன்றி-ஹெல்த் சாய்ஸ்

குழந்தைகளும் விளையாட்டும்

குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை அவளின் கால்களை கட்டிக்கொண்டு விளையாடத்தான் செய்யும்.
குழந்தைகளின் விளையாட்டில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி உண்டு. 6 மாதக் குழந்தை கை, கால்களை மட்டுமே ஆட்டி விளையாடும். ஆனாலும் பேசத்தெரியாத அந்தக் குழந்தையிடம் தன்னையே மறந்து பேசிக் கொண்டு மற்ற எல்லாக் கவலைகளையும் மணிக்கணக்கில் மறந்துவிடும் பெற்றோர்தானே எல்லோருமே!
***
புன்சிரிப்புடன் கொழுகொழுவென்று இருக்கும் குழந்தைகள் விளையாடும்போது மேலும் அழகாகிவிடுகிறார்கள். விளையாட்டின் மூலம்தான் அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டால் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கைகளையும், கால்களையும் ஊன்றி தவழ்ந்து வரும் குழந்தையை பெற்றோர்கள் கைதட்டி `வா…வா…’ என்று உற்சாகமாக அழைப்பார்கள். சிரித்துக் கொண்டே வேகமாகத் தவழத்தொடங்கும் குழந்தை வெகுசீக்கிரமே எழுந்து நடக்கத் தொடங்கிவிடும். வாழ்க்கையிலும் இப்படித்தான் விளையாட்டு உங்கள் குழந்தையை வேகமாக உயரச் செய்யும்.
***
பிறந்த 3 மாதத்திலேயே குழந்தைகள் விளையாடத் தொடங்கிவிடும். 6 மாதம் வரை ஒலியெழுப்பும் பொம்மைகள், அசையும் பொருட்களே இவைகளின் விளையாட்டுத் தோழன். இந்த வயதுக்கு குழந்தைகள் விளையாட்டுச் சாமான்களை பற்றிப்பிடிக்க முயற்சி செய்யும். சத்தம் வரும் திசையில் திரும்பிப் பார்க்கும். பொருட்களை பின்பக்கமாக வைத்துவிட்டால் உருண்டோ, திரும்பியோ பொருளை பார்க்கும். இந்த விளையாட்டுகளால் குழந்தைகள் சுற்றுச்சூழலை கவனிக்கத் தொடங்குகின்றன. மூளைவளர்ச்சி அதிகமாகும். ஒளிரும் செல்போன்கள் இந்தக்கால குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.
***
6 முதல் 10 மாதம் வரை உள்ள குழந்தைகள் புதிய புதிய பொம்மைகளைகளுடன் விளையாட பிரியப்படும். விசை கொடுப்பது, பட்டன் அழுத்துவதன் மூலம் இயங்கும் பொம்மைகளிடம் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பொம்மைகளுடன் விளையாட விரும்பும். அவற்றை தானே இயக்கிவிடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இது தவழும் பருவம் என்பதால் இயங்கும் பொம்மைகளை பின்தொடர முயற்சிப்பார்கள்.
இந்த விளையாட்டுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை முந்தைய நிலையைவிட வேகப்படுத்தும்.
***
ஒன்றேகால் வயது வரையுள்ள குழந்தைகள் நகரும் பொம்மைகளைப் பின்தொடர்ந்து செல்வார்கள். தள்ளுவண்டியின் மூலம் நடை பழகுவார்கள். மற்ற குழந்தைகளின் பின்னால் செல்லத் தொடங்குவார்கள். டப்பாக்களில் மணல் சேகரித்தல், சிதறிய பொருட் களை அடுக்குதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வயதில்தான் கதைகேட்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்போது கதை சொல்லி வளர்க்கத் தொடங்கினால் உங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வளருவார்கள். இது அறிவு, உடல்வளர்ச்சியின் முக்கியமான பருவம். இதற்கு விளையாட்டு மிக மிக அவசியம்.
***
2 வயது வரையுள்ள குழந்தைகள் அறிவுத்திறன் விளையாட்டுகளை கற்றுக் கொள்ளும். பல நிறங்களை அடையாளம் காட்டும், புகைப்படங்களில் இருக்கும் நபர்களைக் கேட்டாலும் காட்டிவிடும். பொம்மைகள் எப்படி இயங்குகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும். பந்து எறிவது, குழாயைத் திருப்புவது போன்ற சிறு பணி சார்ந்த விஷயங்களையும் செய்யும்.
ஓடி ஆடி விளையாடுவதால் கால்களும், உடலும் பலம் பெறும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்வார்கள்.
***
2-3 வயது குழந்தைகள் விளையாடச் சென்றுவிட்டு சரியாக வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பந்தை உதைப்பார்கள், பிடிப்பார்கள். தடுமாறாமல் ஓடிவிளையாடுவார்கள். மணலில் வீடுகட்டி விளையாடுவது, டயரை உருட்டி விளையாடுதல், சுவர்கள், பெஞ்சுகளில் ஏறி விளையாடுவது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த விளையாட்டுகளால் உடல் பலம் பெறும். பல குழந்தைகளுடன் விளையாடுவதால் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்கும். போட்டோவில் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிடும்.
***
குழந்தைகள் விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் ஏராளம். அவர்களின் உடலும், உள்ளமும் பலம் பெறுகிறது. சுற்றுச்சூழலை உணர்ந்து கொள்கிறார்கள். அறிவுத்திறன் வளர்கிறது. நண்பர்கள், பாசம், பிரிவு, வெற்றி, தோல்விகளை அறிந்து கொள்கிறார்கள். சமூகத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் சமூக அக்கறை வளர்கிறது.
அதிகம் அடாவடி செய்வதாக நினைத்து பெற்றோர் குழந்தைகளின் விளையாட்டிற்கு தடை விதிக்கக்கூடாது. அவர்களின் சிறுசிறு வெற்றிகளையும் ஊக்குவித்து பாராட்டினால் அவர்கள் வெற்றியாளர்களாக வளருவார்கள்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட


“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.

“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.

நூலகப் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால், தனியொரு புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ; அதே போன்று நினைவு அடுக்குகளில் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்கவில்லை எனில் தேவையான போது வெளியே எடுப்பது கடினம்.

சரியான முறையில் படித்தால் தகவல்கள் பிசிறில்லாமல் நேரடியாக மூளையின் நினைவகத்தில் தொகுக்கப்பட்டு விடுகிறது. எனவே, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பாடங்களைப் படித்தால் அவர்களின் நினைவாற்றல் திறன் மேம்படும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

சரியான முறையைப் பின்பற்றி பாடங்களைப் படிக்க சில நிபந்தனைகள்:


1. பொருள் உணர்ந்து படி:

ஆர்வம் இருந்தால் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவது எளிது. அதே போன்று படிப்பதை வெறும் கடமையாக நினைக்காமல், ஆர்வத்துடன் கற்க முயற்சி செய்யுங்கள். மேலும் ஒருவரி படித்தாலும் அதன் உட்பொருளை உணர்ந்து படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


2. படிக்கும் சூழல்:

இரைச்சல் மிகுந்த இடங்களில் வசித்தாலும் கருத்தூன்றி படித்து சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அமைதியான சூழலில் கவனமின்றி படித்து தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட, படிக்கும் போது உங்கள் மனம் தெளிவாக குழப்பமின்றி இருப்பதே முக்கியம்.


3. நினைவுக்குக் கொண்டு வருதல்:

படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுகூர்வது சிறந்த மாணவர்களுக்கு அழகு. படித்த விஷயங்களை அடிக்கடி மனத்திரையில் ஓடவிட்டு பயிற்சி செய்வது ஞாபகத்திறனை அதிகப்படுத்தும் வழிகளில் முக்கியமானது. இதனால் பாடங்கள் மறக்காமல் இருப்பதுடன், தேர்வு பயமும் தோன்றாது.


4. மனப்பாடம் கூடாது:

மாணவர்களின் கற்கும் முறைகளில் உள்ள பெரிய குறைபாடு மனப்பாடம் செய்தல். பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை உருக்குலையாமல் அப்படியே மனப்பாடம் செய்து எழுதுவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதில் மாணவர்களுக்கான எழுத்து நடை கொஞ்சமும் இருக்காது. கல்லூரி மாணவர்களை விட, பள்ளி மாணவர்களே மனப்பாடம் செய்வதில் கில்லாடியாக உள்ளனர். கல்லூரி படிப்பிற்குத் தேவையான அடிப்படை பாடங்கள் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் நடத்தப்படுகின்றன. அப்போது நீங்கள் பாடத்தைப் புரிந்து படிக்காமல் மனப்பாடம் உத்தியை செயல்படுத்தினால் கல்லூரியில் திண்டாட வேண்டி இருக்கும். அதாவது கல்லூரி பேராசிரியர் நீங்கள் பள்ளியில் படித்த அடிப்படை பாடத்தை மேலோட்டமாக நடத்தி விட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால் கல்லூரியிலும் நீங்கள் விழிக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் புரிந்து படித்தால் அது காலத்திற்கும் மறக்காது என்பதால், கல்லூரியிலும் நீங்கள் கலக்க உதவியாக இருக்கும்.


5. அன்றே படிக்க வேண்டும்:

பாடங்களை அனுதினமும் படித்தால் பாடச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. படிக்கும் போது முக்கிய குறிப்புகளைத் தனியாக ஒரு டைரியில் பாடத் தலைப்பு வாரியாக குறித்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் மொத்தப் பாடத்திற்கான குறிப்புகளும் அந்த டைரியினுள் அடங்கிவிடும். அடிக்கடி அந்த குறிப்புரைகளைக் கொண்டு நீங்கள் படித்ததை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் தேர்வின் போது பாடப்புத்தகம் முழுமையையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

தாய்மையின் அடையாளங்கள்கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும்.

இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

1. மாத விலக்கு வராமை.
2. குமட்டல்,
3. இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
4. புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.
5. வாசனையைக் கண்டால் நெடி.
6. மார்பகம் பெரிதாவது, தொட்டால் வலி, நரம்புகள் புடைத்துத் தெரிதல், மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல் என மார்பகத்தில் மாற்றங்கள்.
7. மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு.
8. புளி, களிமண், ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கைகால்களும் உருவாகும். இக்காலக்கட்டத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக்குழந்தை பாதிக்கப்படும்.

முதல் அறிகுறிகள்:

முதல் அறிகுறிகள் எப்போதும் தனியாகவோ, பிற காரணிகளுடன் இணைந்தோ தோன்றக்கூடும். இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து கர்ப்பத்தை முடிவு செய்யாமல், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. காரணம், இந்த அறிகுறிகள் சிலவேளைகளில் குழப்பத்தையும் உண்டாக்கும்.

உதாரணத்திற்கு சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு ஆவது என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்காகவதுண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்க நின்றிருக்கும்.

இந்த நிலைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல்,புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடற்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குத் தொடராது. ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

சிலர் கர்ப்பம் தரித்திருப்பார்கள். ஆனால், மாதவிலக்கு வராமல் இருந்தாலும் தங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இவர்களுள் பாலூட்டும் காலத்திலேயே கருத்தரிப்பவர்கள், மாதவிலக்கு வற்றும் காலத்தில் கருத்தரிப்போர் ஆகியோரை உதாரணமாகக் கூறலாம்.

களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடற்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த பன்னிரண்டாவது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

பசலை நோய் அல்லது மசக்கை

இதை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் வருகிறது. மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கூறிய அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பலர் உறுதி செய்துகொள்கிறார்கள்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்னைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

பசலை நோய் அல்லது மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

முட்டையும் அணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படியிருந்தும் சக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

வேறு ஒன்றுமில்லை. தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு வேண்டிய சத்தையும் தாய் பெற வேண்டியுள்ள நிலையிருப்பதே ஆகும். இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகிலிருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

மார்பகப் பகுதியில் மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்திலுள்ள இரத்த நாளங்களும், மொத்தசுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவங்கள் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் மேற்சொன்ன மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

மனநிலை மாற்றமும், எடையில் மாற்றமும்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்கமுடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

வயிறு பெரிதாக…

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக பதினெட்டு முதல் இருபதாவது வாரங்களில் இந்தஅசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
மேலே குறிப்பிட்டுள்ள கருக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாக இருப்பதையும் நீங்கள்அறிந்திருப்பீர்கள். ஆகவே, இந்த அறிகுறிகளை மட்டும் அடையாளமாகக் கொண்டிராமல், கருவை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது. பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் மூன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் மூலம் விரைவாகவே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீர்ப் பரிசோதனை

முதல் சிறுநீரை எடுத்துப் பரிசோதிப்பதற்காக கிட்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இவை பெரும்பாலும் எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதிலேயே கருத்தரித்திருப்பதால் அதற்கான அடையாளம் என்ன, கருத்தரியாவிட்டால் அதற்குரிய அடையாளம் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.

ஹார்மோன் பரிசோதனை

நம்பகமான பரிசோதனை முறை என்பது மாதவிலக்கு நின்ற நாளிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து செய்யப்படுகிறது. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் பாலியல் முதல் சிறுநீரைப் பிடித்து பரிசோதித்தால் அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்க வில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, இரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாதவாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது குயிக்கனிங் பரிசோதனை என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் கையாளுகிறார்கள்.

நன்றி: நியூவேர்ல்டு பப்ளிகேஷன்ஸ்.