கர்ப்பிணி பெண்கள் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கர்ப்பிணி பெண்கள் நலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 செப்டம்பர், 2011

தாய்மையின் அடையாளங்கள்



கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும்.

இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:

1. மாத விலக்கு வராமை.
2. குமட்டல்,
3. இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
4. புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்.
5. வாசனையைக் கண்டால் நெடி.
6. மார்பகம் பெரிதாவது, தொட்டால் வலி, நரம்புகள் புடைத்துத் தெரிதல், மார்பகக் காம்புகள் கருப்பாக மாறுதல் என மார்பகத்தில் மாற்றங்கள்.
7. மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு.
8. புளி, களிமண், ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஆசை ஏற்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கைகால்களும் உருவாகும். இக்காலக்கட்டத்தில் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக்குழந்தை பாதிக்கப்படும்.

முதல் அறிகுறிகள்:

முதல் அறிகுறிகள் எப்போதும் தனியாகவோ, பிற காரணிகளுடன் இணைந்தோ தோன்றக்கூடும். இந்த அறிகுறிகளை மட்டும் வைத்து கர்ப்பத்தை முடிவு செய்யாமல், அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. காரணம், இந்த அறிகுறிகள் சிலவேளைகளில் குழப்பத்தையும் உண்டாக்கும்.

உதாரணத்திற்கு சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு ஆவது என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்காகவதுண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்க நின்றிருக்கும்.

இந்த நிலைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல்,புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், இரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடற்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குத் தொடராது. ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

சிலர் கர்ப்பம் தரித்திருப்பார்கள். ஆனால், மாதவிலக்கு வராமல் இருந்தாலும் தங்கள் கருத்தரித்திருப்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இவர்களுள் பாலூட்டும் காலத்திலேயே கருத்தரிப்பவர்கள், மாதவிலக்கு வற்றும் காலத்தில் கருத்தரிப்போர் ஆகியோரை உதாரணமாகக் கூறலாம்.

களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடற்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த பன்னிரண்டாவது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

பசலை நோய் அல்லது மசக்கை

இதை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பல பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் வருகிறது. மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கூறிய அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பலர் உறுதி செய்துகொள்கிறார்கள்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்னைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

பசலை நோய் அல்லது மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

முட்டையும் அணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படியிருந்தும் சக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

வேறு ஒன்றுமில்லை. தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு வேண்டிய சத்தையும் தாய் பெற வேண்டியுள்ள நிலையிருப்பதே ஆகும். இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகிலிருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

மார்பகப் பகுதியில் மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்திலுள்ள இரத்த நாளங்களும், மொத்தசுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவங்கள் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் மேற்சொன்ன மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

மனநிலை மாற்றமும், எடையில் மாற்றமும்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்கமுடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

வயிறு பெரிதாக…

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக பதினெட்டு முதல் இருபதாவது வாரங்களில் இந்தஅசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
மேலே குறிப்பிட்டுள்ள கருக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாக இருப்பதையும் நீங்கள்அறிந்திருப்பீர்கள். ஆகவே, இந்த அறிகுறிகளை மட்டும் அடையாளமாகக் கொண்டிராமல், கருவை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

கருவை உறுதிப்படுத்தும் பரிசோதனை முறைகள்

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது. பெண்ணுறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் மூன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும். என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் மூலம் விரைவாகவே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீர்ப் பரிசோதனை

முதல் சிறுநீரை எடுத்துப் பரிசோதிப்பதற்காக கிட்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இவை பெரும்பாலும் எல்லா மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். இதிலேயே கருத்தரித்திருப்பதால் அதற்கான அடையாளம் என்ன, கருத்தரியாவிட்டால் அதற்குரிய அடையாளம் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு பெண்ணின் கர்ப்பத்தை உறுதி செய்யலாம்.

ஹார்மோன் பரிசோதனை

நம்பகமான பரிசோதனை முறை என்பது மாதவிலக்கு நின்ற நாளிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து செய்யப்படுகிறது. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹியூமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் பாலியல் முதல் சிறுநீரைப் பிடித்து பரிசோதித்தால் அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்க வில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, இரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் மூலம் அறிந்துகொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாதவாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது குயிக்கனிங் பரிசோதனை என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.
இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் கையாளுகிறார்கள்.

நன்றி: நியூவேர்ல்டு பப்ளிகேஷன்ஸ்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நார்மல் பிரச்சனைகள் ?

 
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அடிவயிற்றில் அசௌகர்யமும், இழுத்துப் பிடித்துக் கொள்ளுதலும் ஏன் ஏற்படுகிறது?

கருத்தரித்த ஆரம்பகாலத்தில் பெண்களுக்கு அடிவயிற்றில் ஒரு விதமான அசௌகர்யமும், பீரியட்ஸ் சமயங்களில் ஏற்படுவது போலவே அடி வயிற்றில் இழுத்துப் பிடிப்பதும் ஏற்படும். இது ஏனென்றால் வயிற்றில் உள்ள குழந்தை வளரவளர கருப்பையும் விரியத் தொடங்கும். இதனால்தான் மேலே சொன்ன விஷயங்கள் அடிவயிற்றில் நடக்கின்றன. இந்த அசௌகர்யம் கர்ப்பமடைந்த முதல் சில மாதங்கள் வரை தொடரும்.சில நேரத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது வரும். அதே போல படுத்துக் கொண்டே ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குத் திரும்பும் போதும் ஏற்படும். இந்த வலி நார்மல்தான். இதற்கு நீங்கள் பெட் ரெஸ்ட்டெல்லாம் எடுக்கத் தேவையில்லை. இந்த வலி நீங்கள் வேகமாக நடக்கும்போது ஏற்பட்டால் சில நிமிடத்திற்கு ரெஸ்ட் எடுத்து விட்டு மீண்டும் நடக்கத் தொடங்கலாம்.

கர்ப்பம் வளர வளர சில பெண்களுக்கு அடி வயிற்றில் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமோ வலி ஏற்படலாம்.இது ஏனென்றால், கர்ப்பப்பையில் இரண்டு பக்கமும் இருக்கும் ரவுண்ட் லிகமெண்ட்ஸ் (Round Ligaments) விரிவதனால். இந்த வலியை குறைப்பதற்கு வலி இருக்கும் பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டாலே போதும்.

அடிக்கடி சிறுநீர் வருதல்!

கர்ப்பமான புதிதில் அடிக்கடி யூரின் போக வேண்டும் போலத் தோன்றும். சிறுநீர்ப்பை அடிக்கடி நிரம்பிவிடுவது போல் உணர்வார்கள். எனவே அடிக்கடி பாத்ரூமை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். இந்த அறிகுறி கர்ப்பமடைந்த முதல் 16 வாரங்கள் வரைக்கும் இருந்து விட்டு, பின்னர் தானாகவே மறைந்து விடும்.

இந்த சமயத்தில் ஏன் அடிக்கடி யூரின் வருகிறது?

குழந்தை வளரவளர கருப்பை பெரிதாகி சிறுநீர்ப்பையை அழுத்த ஆரம்பிக்கும். இந்த அறிகுறி கர்ப்பமடைந்த புதிதிலும், கர்ப்பமான கடைசி மாதங்களிலும் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் கடைசி சில பெண்களுக்கு தும்மும் போதும், இருமும் போதும் லேசாக சிறுநீர் கசியும். இந்த அறிகுறி டெலிவரியான சில மாதங்களில் மறைந்து விடும்.

பொதுவாக கர்ப்பமான ஆரம்ப மாதங்களில் அடிக்கடி தீவிரமான தலைவலி ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் இந்த தலைவலி கண்கள் ஸ்ட்ரெயின் ஆவதாலோ அல்லது சைனஸாலோ கூட ஏற்படலாம். ஆனால் மேக்ஸிமம் இந்த தலைவலிகளுக்கு காரணமே தெரிவதில்லை.

இதற்கு பாரசிட்டமால் (Paracetamol) மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். சில பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால், கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இது இன்னும் அதிகமாகும். ஈஸ்ட்ரோஜன் அதிகமாவதுதான் இதற்கு காரணம்.

கருத்தரித்த ஆரம்பத்தில் `மூட் அப்செட்' ஆவது நார்மல்தான். கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்கள் திடீரென்று அதிகமாக சுரப்பதால் கருத்தரித்தப் பெண்கள் எமோஷனலாக சில ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளுவார்கள். இதனால் அவர்கள் சட்டென்று அழுவார்கள்...
கோபப்படுவார்கள்... மற்றும் காரணமே இல்லாமல் அப்செட் ஆவார்கள். கருத்தரித்த பெண்கள் இப்படி நடந்து கொள்ளும்போது, அவருடைய கணவரும், குடும்பத்தாரும் காரணம் தெரியாமல் தயங்குவார்கள். சில நேரங்களில் கவலையும்படுவார்கள்.

ஆனால் இந்தப் பிரச்னையெல்லாம் தற்காலிகம்தான். சில நாட்களில் உடம்பிற்கு இந்த ஹார்மோன் உற்பத்தி பழகிய பின் இவையெல்லாம் சரியாகிவிடும்.

கருத்தரித்த ஆரம்பத்திலும்,கடைசியிலும் சோர்வாகவோ அல்லது மயக்கம் வருவது போலவோ உணர்வது பொதுவான அறிகுறிதான். கர்ப்பமாக இருக்கும் போது ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால் நின்று கொண்டிருக்கும் போது இரத்தம் கால்களில் சேர்ந்துவிடும். சட்டென்று கிறுகிறுப்பாகவோ அல்லது மயக்கம் வருவது போன்றோ தோன்றும். இப்படி ஏற்படும் போது கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டு கால்களைத் தூக்கி ஒரு தலையணை மேல் வைத்துக் கொள்வதுதான் இதற்கு பெஸ்ட் தீர்வு.

கருத்தரித்த புதிதில் சில பெண்களுக்கு குளிர்வது போன்றும், ஜுரம் இருப்பது போன்றும் தோன்றும். ஆனால் ஜுரம் இருக்காது. இந்த அறிகுறியும் கர்ப்பமான 4-ம் மாதத்தில் சரியாகி விடும்.

கருத்தரித்த முதல் சில வாரங்களில் சில பெண்களுக்கு மலச்சிக்கல் இருக்கலாம். ஏனென்றால், குமட்டல் இருப்பதால் தண்ணீர்கூட குடிக்க முடியாத நிலையில் இருப்பார்கள். இதனால் சாதாரணமாக மலம் கழிப்பவர்களுக்குக் கூட இந்த பிரச்னை வரலாம். தீவிர மலச்சிக்கல் இருக்கும்போது மலம் கெட்டியாக இருப்பதால் வலியும், ரத்தக் கசிவும் ஏற்படலாம். இதற்கு நீராகாரங்களை நிறையச் சாப்பிட்டு, கொஞ்சம் எக்ஸர்சைஸ் செய்தாலே இந்த பிராப்ளம் சரியாகி விடும். ஆனால் இந்தக் குமட்டல் உங்களை எந்த நீராகாரமும் சாப்பிடவிடாமல் செய்தால் டாக்டரிடம் அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும் மேலே சொன்ன பிரச்னை வரலாம். இதற்கு மோர், ஜூஸ், காய்கறி சாலட், பழங்கள் இவையெல்லாம் தீர்வே... கர்ப்பமாக இருக்கும்போது சில மாதங்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகலாம். கருப்பை வாயிலிருந்து சளி போன்ற டிஸ்சார்ஜ் அதிகமாகும் இது உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் இது சாதாரண விஷயம்தான். இந்த டிஸ்சார்ஜால்உங்களுக்கு அரிப்போ, எரிச்சலோ இருந்தால்தான் இன்ஃபெக்ஷன் என்று நினைக்க வேண்டும். இதற்கு மாத்திரைகளும், ஆயின்மெண்ட்டும்தான் ட்ரீட்மெண்ட்!

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய்



கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் தாக்கம் பல காரணங்களால் வருகிறது. அதில் உணவு பழக்க வழக்கத்தாலும் மனக் கவலையாலும் உண்டாகும் பாதிப்புகளை சென்ற இதழில் கண்டோம். பிற காரணங்களால் ஏற்படும் மஞ்சள் காமாலை என்ன என்று பார்ப்போம்.

கர்ப்பமுற்றிருக்கும்போது தாய்க்கு காமாலை வருவது என்பது மிக அரிதாக நடக்கக் கூடியதாயிருந்தாலும் அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக தாய்க்கும் சேய்க்கும் அமைகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலை மிகவும் மோசமான விளைவுகளை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்துகிறது. Hepatitis GB என்னும் வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. Hepatitis A, B,C,D & E என்று பல வகைகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் 0.1 சதவீதம் கர்ப்பிணிப் பெண்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார்கள். வளரும் நாடான நம் நாட்டில் 3-20 சதவீதம் வரை மஞ்சள் காமாலை நோயால் கர்ப்பமுற்ற பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் Hepatitis E வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களில் 10--20 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, எவ்வாறு கர்ப்பிணிப் பெண்களை நோய்க் கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும், மேலும் நோய் தாக்குதல் வந்தால் எவ்வளவு விரைந்து செயல்பட்டு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே.

முதலில் நோய் தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணியை சுகாதாரமான சூழலில், தனிமையில் இருக்கச் செய்ய வேண்டும். இது மற்றவர்களுக்கு இந்த நோய் தொற்றாமல் தடுத்துவிடும்.

அவர்களுக்கு சரியான அளவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய அளவில் உணவுகளைக் கொடுத்து பராமரிக்கவேண்டும்.

அந்தந்த வைரஸ் கிருமி தாக்குதலுக்கு தக்க தடுப்பூசி (vaccine) மற்றும் இம்முனோகுளோபுலின் (Immuneglobulin) கொடுக்கப்பட வேண்டும்.

தாய்மார்கள் கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாத கால கர்ப்ப காலத்தில் Hepatitis B வைரஸ் ரத்தத்தில் உள்ளதா என்று அறியப்பட வேண்டும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு US Hepatitis B Immunoglobulin பிரசவம் ஆனவுடன் போடப்படவேண்டும். Hepatitis B தடுப்பூசி பிரசவம் ஆன 1 வார காலத்தில் ஒன்றும், மீண்டும் 1 மாத காலத்தில் ஒன்றும், பின் 6 மாத காலத்தில் ஒன்றும் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்பட்டால்தான் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

தாயிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று குழந்தைக்கு முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் மிகவும் அரிதாகவும், இரண்டாவது மூன்று மாத கர்ப்ப காலத்தில் 6 சதவீதமாகவும், கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்தில் 67 சதவீதமாகவும் தொற்றிக் கொள்கிறது.

இந்த வைரஸ் தொற்று இல்லாமல் சில சமயம் கர்ப்பிணி பெண்களிடம் மஞ்சள் காமாலை தென்படும். அதற்குக் காரணம் பித்தப்பையில் கற்கள் உருவாகுதல் ஆகும். இந்த கற்கள் ஓரளவிற்கு மேல் பெரிய அளவில் உருவாகும்போது பித்தப்பை வாயை அடைத்துவிடுவதால் மஞ்சள் காமாலை ரத்தத்தில் தென்படும். இதனோடு வலதுபக்க வயிற்றுப் பகுதியில் தாங்கமுடியாத வலியும் இருக்கும். இப்படிப்பட்ட சமயங்களில் ஒருசில நேரம் அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்ற வேண்டிவரும்.

கர்ப்பிணிப் பெள்களுக்கு 5-6 மாத காலத்தில் உடலில் எல்லா இடங்களிலும் அரிப்பும் அதனோடு ரத்தத்தில் பித்த நீர் அளவு ( (Bile Acid) அதிகரிக்கும். அரிப்புடன் சில நேரம் ரத்தத்தில் Hepatitis அளவும் அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை என்ன காரணம் கொண்டு ஏற்படுகிறது என்பதை பலவித சோதனைகள் மூலம் கண்டறிந்து அதற்கு தக்க மருத்துவம் செய்வது நன்று. ஆனால் பொதுவான சில உணவு முறைகளை மஞ்சள் காமாலை கண்ட தாய்மார்கள் பின்பற்ற வேண்டும்.

வருமுன் காப்பது நல்லது. அதனால் கர்ப்பம் தரிக்கும் முன்னாகவே ஏஞுணீச்tடிtடிண் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெய், நெய், எண்ணெய் பொருட்கள் நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது.

மிகுந்த காரமான உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

காபி, டீ மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் முறையான Antenatal Check up செய்து தன்னையும் குழந்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கர்ப்பிணிகள் ஓவனை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்

 
கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர்.

பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் மருத்துவ விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். 13 ஆண்டுகள் கழித்து அந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் பற்றி ஆராய்ந்தனர்.

மின்காந்த கருவிகளை குறைவாக பயன்படுத்தியவர்களைவிட அதிக நேரம் பயன்படுத்திய கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது.

கர்ப்பிணிகள் மின்காந்த கருவிகளின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது அவசியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத்துடன் அவை இயங்கும் போது அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதை தடுக்க முடியும் என ஆய்வுக் குழுவின் தலைவர் டிகுன் லி தெரிவித்துள்ளார்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்


கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இதை ஃபாலோ செய்தால் ஆபத்தில்லாத பிரசவமும், ஆரோக்யமான குழந்தையும் நிச்சயம் என்கிறார் சென்னையில் மிகப் பிரபல கப்பேறு மருத்துவரான டாக்டர் அமுதா ஹரி!
*


திட்டமிட்டு கருத்தரியுங்கள்:


திருமணமானவுடன் உடனடியாக கருத்தரிப்பதை விரும்பாத தம்பதிகள் அதற்கேற்ப திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். கருத்தரித்தபின் அபார்ஷன் செய்து கொண்டால் அடுத்த குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கும், தாயின் உடல் நிலைக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும்!


*

டாக்டர் ஆலோசனை இல்லாமல் நோ டேப்லெட் ப்ளீஸ்!


கர்ப்ப காலத்திற்குத் திட்டம் போடும் பொழுது கூட இரத்த உறவுகளில் திருமணம் செய்து கொண்டவரா, அவர்களது பரம்பரையில் யாருக்காவது பெரிய வியாதிகள் இருக்கிறதா? என்பதை எல்லாம் மருத்துவரிடம் சொல்லி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

*

கர்ப்பம் தரித்தவுடன், அல்லது மாதவிலக்கு 15 நாட்கள் தள்ளிப் போனவுடன் வேறு ஏதேனும் வியாதிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தள்ளிப் போட வேண்டும். ஏற்கெனவே உடல் நலக்குறைவு இருந்து, அதற்கு ஃபோலிக் ஆஸிட் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடலாம்!

*

கர்ப்பகாலத்தில் வேறு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவருடைய ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் வரும் சுகருக்கு மாத்திரை போடக் கூடாது. சர்க்கரை நோய் மருத்துவரைப் பார்த்து உணவு மூலமே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால் வாரம் ஒருமுறை, இருமுறை இரத்தப் பரிசோதனை செய்து இன்சுலின் போட்டுக் கொள்ளலாம்.

*

அப்படிச் செய்யாமல் இருந்தால் குழந்தை அதிக எடையுடன் பிறக்கும். பிறவிக் கோளாறுகளும் வரலாம். குழந்தைக்கு சர்க்கரை வியாதி வரவும் வாய்ப்பு உண்டு. ஏன் வயிற்றிலேயே குழந்தை இறக்கக் கூட வாய்ப்புகள் அதிகம்.

*

கர்ப்பிணிகளுக்கு இரத்தக் கொதிப்பு இருக்குமானால் ஸ்பெஷல் கவனம் தேவை. டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சாதாரணமாகக் கால்கள் வீங்கித் தானாகக் குறைந்து விடுமானால் பிராப்ளம் இல்லை. ஆனால் உடல் முழுதும் வீங்கி வந்தால் நிச்சயம் அது ஹை பி.பி. ஆக இருக்கும்.


***

 
 
என்னென்ன சாப்பிடலாம்?

கர்ப்பம் உறுதியானால் தலைசுற்றல், வாந்தி, லைட்டாக உதிரம் கூட வரலாம். காரம் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாமல், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். ப்ரூட்ஸ், தண்ணீர் என நிறைய எடுத்துக் கொள்ளலாம். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வாந்தி அதிகமாக இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரத்த சோகை இருந்தால் டயட்டில் பீட்ரூட், கேரட், பேரீச்சை, ஆப்பிள், கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.

*

அதிகக் கொழுப்புள்ள உணவு வகைகள், ஃபாஸ்ட் ஃபுட், கோக் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொள்ளக்கூடாது.


***

நீங்கள் செய்ய வேண்டிய ஸ்கேன் மற்றும் டெஸ்ட்கள்!


கர்ப்ப காலத்தை:

முதல் மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

*

முதல் ஆறு மாதங்கள், மாதம் ஒரு முறையும், மீதி மூன்று மாதங்கள் மூன்று வாரத்துக்கு ஒரு முறையும் செக்கப்புக்குப் போக வேண்டும்.


*

முதல் மூன்று மாதங்களில் வாந்தி, எடை குறைதல், களைப்பு, தலைசுற்றல் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் இரத்தப் பரிசோதனை எந்தப் பிரிவு இரத்தம், பால்வினைத்தொற்று போன்ற நோய்கள் இருக்கிறதா, முக்கியமாக இரத்தம் நெகடிவ் குரூப்பா, இரத்த சோகை இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

***


கவனியுங்க கணவர்களே:


முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவினைத் தவிர்க்கலாம் அல்லது மனைவியின் உடல் நிலையைப் பொறுத்து மிதமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அபார்ஷன் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கும்.

*

கர்ப்ப காலத்தில் பிரயாணங்கள் வேண்டாம்.

*

கர்ப்பத்தின் போது யோகா, உடற்பயிற்சிகள் செய்வது என்றால், வயிறு விரிந்து சுருங்கும் சில பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

*
முதலாவது, இரண்டாவது மாதத்தில் மூச்சுப்பயிற்சி மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு மனைவியுடன், கணவனும் சேர்ந்து செய்தால், இருவருக்கும் இடையில் நல்ல ஒரு புரிதலும், இன்வால்வ் மென்ட்டும் வரும்! நடைப் பயிற்சியும் நல்லது.

*
மூன்றாவது மாதத் துவக்கத்தில் முதல் ஸ்கேன் செய்து கருக் குழாயிலிருந்து கரு, கர்ப்பப்பைக்கு வந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.

*

இரண்டாவது ஸ்கேன் இது குழந்தைக்கு நார்மலான, நல்ல இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.

*

மூன்றாவது ஸ்கேனை பதினாறிலிருந்து இருபது வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இது குழந்தையின் அங்க அவயங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு.

*

நான்கு, ஐந்து, ஆறாம் மாதங்களில் சர்க்கரையும், பி.பி.யும் உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (இதற்கு முன் இல்லாமல் இருந்து இப்பொழுது இருந்தால் பயப்படத் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஆறு வாரங்களில் இது சரியாகி விடும்.)

*


குழந்தையின் அசைவு 7ம் மாதத்திலேயே தொடங்கிவிடும். அப்படித் தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

*

வாரம் அரை கிலோ எடை ஏறுவதுதான் மெடிக்கலி ஆரோக்கியமான, சரியான விஷயம். பிரசவகாலத்தில் கடைசி மூன்று மாதங்களில்தான் சரியான எடைகூடும்.

*

கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக்கூடாது. குழந்தையின் எடை கர்ப்பப்பையை அழுத்தி இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.

*

டெலிவரி நேரத்தில் அல்லது 9வது மாதத்தில் சில நேரத்தில் வலி தோன்றும்... பிரசவ வலி என்றால் விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும். போகப் போக வலி அதிகரிக்கும். சாதாரண வலி என்றால் வந்து விட்டுப் போய் விடும்.

*

எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லை என்றாலோ, வலி இல்லாமல் சிறுநீர் மாதிரி தண்ணீர் போய்க் கொண்டு இருந்தாலோ, சில சமயம் வலியுடன் நீர்போவதும் உணர்ந்தாலோ உடனே மருத்துவரைத் தேடிப்போகவேண்டும்.


***


35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?


35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிக்கும் பெண்களை ஸ்பெஷல் கவனம் கொடுத்து தனியாக பரிசோதனைகள் மற்றும் ட்ரீட்மெண்ட்கள் தர வேண்டும்.

*

வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலி பொறுத்துத்தான் ஆகவேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும். சிசேரியனைத் தவிர்க்கலாம்.

*

ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பயப்படக்கூடாது.

*

கர்ப்பமான நேரத்தில் தாய் அமைதியான மனதுடன், தெளிவான எண்ணங்களுடன் மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் தாய்மை ஒரு இனிய அனுபவம் ஆக இருக்கும்!

***

நன்றி கூடல் தளம்.

***


"வாழ்க வளமுடன்"

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை சில விஷயங்கள் !!!

 


கர்ப்பிணிகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இதை செய் இதை செய்யாதே என்ற பெரியவர்கள் பலரும் அறிவுரை கூறுவார்கள்.

அதில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாக அமையும். அதாவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது, மல்லாக்காக படுக்கக் கூடாது, உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை உண்ணக் கூடாது போன்றவை.

இதை எல்லாம் பெரும்பாலும் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது.

முதலில் உணவு வகைகளில் சாப்பிடக் கூடாதவைப் பற்றிப் பார்ப்போம்.

அதாவது வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை.


மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.


இதேப்போல் அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.

‌மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.

உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.

உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.

முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும்.


அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.

ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.

மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம்.


அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.

சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.

சனி, 30 ஜூலை, 2011

கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.

 1. சமவீத உணவை உட்கொள்ளல்:

பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.
 
2. போலிக் அமிலம் மாத்திரைகள்:

நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

 
3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:


மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

 
4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:


சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

 
5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

 
6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

 
7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்


இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

 
8. பரிசோதனை நேரம்:


கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

 
9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:

 
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

 
10. புகை பிடித்தலை தவிர்த்தல்:


எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

மேலும் சில துணுக்குகள்:

  • நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
  • முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
  •  நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.
  • சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.

 ஆணின் பங்கு என்ன?

ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
  • . நல்ல ஆரோக்கியமான உணவு
  • .புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
  • . மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
  • 4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

நீர்க்குடம் உடைதல்


கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது.

அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது.


இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்...

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்)

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவ முறை

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது
உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.


இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது.


ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

நச்சுக்கொடி பிரிதல்




Placenta எனப்படும் நச்சுக் கொடி குழந்தைக்கு தேவையான பாதர்த்தங்களைத் தாயில் இருந்து எடுத்து குழந்தைக்கு வழங்குவதோடு குழந்தையில் இருந்து கழிவுகளை தாயின் குழந்தைக்கு அனுப்பும் உறுப்பாகும். இது வழமையாக குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறும்.

ஆனால் சில வேளைகளில் குழந்தை பிறப்பதற்கு முன்னமே இதுகருப்பையில் இருந்து பிரிந்து வெளியேறலாம். இது ஆங்கிலத்திலே Placental abruption எனப்படும் .இது மிகவும் அபாயகரமானது. குழந்தை பிறப்பதற்கு முன்னமே நச்சுக் கொடி கருப்பையில் இருந்து பிரிவதால் குழந்தைக்குத் தேவையான ஒட்சிசன் உட்பட்ட முக்கிய பதார்த்தங்கள் கிடைக்காமல் போவதால் குழந்தை கருப்பையிலேயே இறந்து போய் விடலாம்.

குழந்தை பிறப்பதற்கு முன்னமே பிரிந்த நச்சுக் கொடியில் இரத்தம் கட்டியாகி உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் எவ்வளவு விரைவாக குழந்தை பிறக்கச் செய்யப் பட முடியோ அவ்வளவு விரைவாக பிறக்கச் செய்யப்பட வேண்டும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சீசர் செய்ய வேண்டி வரலாம். ஆனாலும் சில வேளைகளில் கருப்பைக் வாயில் போதியளவு விரிவடைந்து இருந்தால் சீசர் செய்யாமல் ஆயுதங்கள் ..பாவிப்பதன் மூலம் குழந்தை பிறக்கச்செய்யப்படலாம்.
.

பொதுவாக இது கர்ப்பம் தரித்து 5-6 மத காலத்திற்குப் பின்பு எப்போதும் ஏற்படலாம்.

அறிகுறிகள்...
1.தொடர்ச்சியான வயிற்று வலி (பிரசவ வலி விட்டு விட்டே ஏற்படும்)
விட்டு விட்டு ஏற்படாமல் தொடர்ச்சியாக வயிறு வலி ஏற்பட்டால் அது நச்சுக் கொடி பிரிந்ததால் இருக்கலாம்.

2.பிள்ளைத் துடிப்புக் குறைதல்

3.மயக்கம் வருவது போன்ற உணர்வு

4.சிலவேளைகளில் வயிற்று வலியுடன் சிறிதளவு ரத்தம் யோனி(பிறப்புறுப்பு) வழியே வெளிப்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள கர்ப்பிணிகள் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

இது எவருக்கு வேண்டுமானாலும் எந்தவிதமான காரணம் இல்லாமலும் ஏற்படலாம்.ஆனாலும் பலமாக வயிற்றிலே அடிபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.மேலும் கர்ப்பகால பிரசர் நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஏற்கனவே சொன்னது போல இந்த நோய் கருப்பையின் உள்ளேயே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம்.அத்தோடு அதிக இரத்தம் வெளியேறுவது காரணமாக தாயின் உயிருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதற்கு மருத்துவ முறை

குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் உடனடியாக பிறப்புத் தூண்டப்பட வேண்டும். சில வேளைகளில் சீசர் செய்ய வேண்டி வரலாம்.

ஆகவே கர்ப்பம் தரித்து .. மாத காலத்திற்குப் பின் உங்களுக்குத் தொடர்ச்சியான வயிற்று வலி ஏற்பட்டால் எந்தவைதமான உணவுகளையும் வாய் வழியே உட்கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று உங்களுக்கு இந்த நோய் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

தொப்புள்க்கொடி வெளியேற்றம்

தொப்புள் கோடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும்,குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும். ஆனால் சில வேளைகளில் இது குழாந்தை பிறப்பதற்கு முன்னமே வெளிவரலாம் இது cord prolapse எனப்படுகிறது.

இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும்.

கருப்பைக்கு வெளியே தொப்புள் கொடி கீழிறங்குதல்
இது ஏற்படும் பெண்களில் சிலவேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்படலாம் அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே இருக்கலாம்.அப்போது உங்கள் பிறப்பு உறுப்பினுல்லேயே
எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.


வைத்தியசாலைக்கு செல்லும்போது நீங்கள் இருக்கவேண்டிய நிலை
குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.சிலவேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம். அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்யவேண்டி வரலாம்.

உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் எந்தவிதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.

இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது.

ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால் , உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.