திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை சில விஷயங்கள் !!!

 


கர்ப்பிணிகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இதை செய் இதை செய்யாதே என்ற பெரியவர்கள் பலரும் அறிவுரை கூறுவார்கள்.

அதில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாக அமையும். அதாவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது, மல்லாக்காக படுக்கக் கூடாது, உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை உண்ணக் கூடாது போன்றவை.

இதை எல்லாம் பெரும்பாலும் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது.

முதலில் உணவு வகைகளில் சாப்பிடக் கூடாதவைப் பற்றிப் பார்ப்போம்.

அதாவது வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை.


மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.


இதேப்போல் அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.

‌மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.

உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.

உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.

முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும்.


அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.

ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.

மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம்.


அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.

சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.

மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக