வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
வரலாறு:
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு.
இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.
வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.
வகைகள்:
இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.
விசேஷ குணம்:
வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.
வாங்குவது எப்படி?:
இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.
பாதுகாப்பு:
ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.
சமைக்கும் போது கவனிக்க:
இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.
மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.
மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.
வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.
இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
உணவுச் சத்து:
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:
கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.
வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.
வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.
வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.
வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக