வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பெண்களை பாதிக்கும் மெனோபாஸ்..

 

ரு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் ஏராளம். மாதச் சுழற்சி நிற்கும் இந்த காலத்தை மெனோபாஸ் என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

வேதம் பெண்ணை அக்னியின் சொரூபமாகவே பார்க்கிறது. ஏனெனில், oestrogen என்ற பெண் ஹார்மோன் அக்னிக்கு சமமான துல்லியமான குணங்களை உடையது. இதே போல் Testosterone என்ற ஆண் ஹார்மோன் ‘÷-ஸாமம்’ என்ற குணம் கொண்டது. இந்த oestrogen சினைப்பை (ovary)-ல் உற்பத்தி ஆகிறது. பெண்கள் பூப்படையும் 10-12 வயதுக்கு இது நன்கு சுரக்க ஆரம்பித்து அதனுடைய வேலையை தவறாமல் மாத மாதம் செய்வதால்தான் அவள் சரியான மாதவிடாய் சுழற்சியை பெற முடிகிறது. பின் 45-50 வயது ஆகும்போது சினை முட்டைகளின் செயல்பாடு குறைவதால், அதனுடைய சுரப்புத் தன்மை குறைகிறது. அந்த நேரத்தில் மாதவிடாய் சுழற்சி தடைபட ஆரம்பிக்கிறது.

இந்த காலம் பெண்களின் முக்கியமான காலமாக கருதப்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதனால் உடலளவிலும், மனதளவிலும் அவதிப்படும் பெண்கள் தற்போது ஏராளம்.

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது கபம் மேலோங்கி இருக்கும். பருவ வயதில் பித்தம் மேலோங்கி இருக்கும். 40-45 வயதுக்குப் பிறகு உடலில் வாதத்தன்மை அதிகரிக்கும். பித்தத்தின் வயதிலிருந்து வாதத்தின் வயதுக்குச் செல்லும் காலமே, மாதவிடாய் நிற்கும் காலமாகிறது.
இந்த காலத்தில் உடல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஹாட்ஃப்ளாஸ்கள் (Hot splash) தானாக உடலின் ஒரு சில பகுதிகளில் உஷ்ண உணர்வு தென்படும். அதுவே மறைந்துவிடும். இது சாதாரணமாக ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரை காணப்படலாம். இதற்கான முக்கியக் காணம் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வுகளும் ரத்த நாளங்கள் விரிவடைவதும் தான்.

ஒரு சிலருக்கு அதிகமான வியர்வை ஏற்படலாம். இரவு நேரங்களில் அதிகமாக வியர்த்துக் கொட்டுவதால் உறக்கம் பாதிக்கப் படலாம். தலை சுற்றல், கை கால்கள் மரத்துப் போதல், இருதயப் படபடப்பு, உடல் எடை கூடுதல், பெண் உறுப்பில் வறட்சித்தன்மை, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பல இடர்பாடுகள் ஏற்படலாம்.

ஒரு சிலருக்கு இந்த இடர்பாடுகள் ஏற்படாமலும் இருக்கலாம்.

கவனிக்க வேண்டிய இடர்பாடுகள் சில


· இருமும்போதும் தும்மும்போதும் சிறுநீர் கசிதல் (Stress incontinence)


· எலும்புத் தேய்மானம் (Osteoporosis) உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் எலும்பின் கெட்டித்தன்மை குறைந்து பலம் குறையும். அதனால் மூட்டுகளில் வலி கால் எலும்புகளில் வலி போன்றவை ஏற்படும்.


· ஈஸ்ட்ரோஜன் உடலில் நன்கு வேலை செய்யும் காலத்தில் உடலில் கொழுப்புச் சத்து சேர விடாது. அதனுடைய அளவு குறையும் காலத்தில் உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். இதனால் உடல் எடை கூடும். மேலும், இருதய சம்பந்தமான நோய்கள் எளிதாக தாக்கக்கூடும்.


· மன சஞ்சலங்கள் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், சோகம், மன பரபரப்பு, எரிச்சல், அசதி போன்ற இடர்பாடுகள் அதிகமாக தென்படும்.


இந்த இடர்பாடுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியுமா?


முடியும்.. எப்படி?


சில வாழ்வியல் மாற்றங்களை மெனோபாஸ் காலத்தில் மேற்கொள்வதன் மூலம் இத்தகைய தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

உணவு முறை


· மிக எளிதாக சீரணிக்கத்தக்க உணவுகளை நேரம் தவறாமல் உண்ணுதல் வேண்டும்.


· எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை அறவே தவிர்த்தல் வேண்டும்.


· மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


· நீண்ட பட்டினி, உபவாசம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.


· காலையில் சரியான நேரத்தில் சிற்றுண்டி, மதியம் காய்கள் கீரைகள் கலந்த அளவுடன் ஆன உணவு, இரவு அரை வயிறு மட்டுமே நிரம்பக்கூடிய எளிதில் சீரணமாகக்கூடிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.


· நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்துவிட வேண்டும்.


· காபி, டீ, அளவுடன் அருந்த வேண்டும்.



உடற்பயிற்சி


நடைபயிற்சி இதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை நடைபயிற்சி செய்யலாம்.


நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய பூங்காக்களிலோ, அல்லது கடற்கரை சாலைகளிலோ நடைபயிற்சி செய்யலாம் .


யோகப் பயிற்சி மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல நிவாரணம் அளிக்கிறது. தியானம், மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்களை வெளியேற்றுகிறது. இதனால் மனது லேசாகி, எதையும் தெளிவுடன் அணுக முடிகிறது. மேலும் இருதய சம்பந்தமான நோய்களிலிருந்தும் விடுபட வைக்கிறது.


மன அழுத்தத்தைக் குறைக்க மனதிற்கு இனிய இசைகளைக் கேட்கலாம்.


40 வயதில் இருந்து பெண்கள் இத்தகைய வாழ்வியல் மாற்றங்களை சரியான முறையில் கடைப்பிடித்தால் மெனோபாஸ் என்ற அந்த காலத்தை மிகச்சிரமங்களுடன் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக