சனி, 24 செப்டம்பர், 2011

அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்

 


வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’ பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது. சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும், அதிக உடல் பருமனுடனும் இருப்பர். அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.

ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக “டிவி’ பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது. பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகள், “டிவி’யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, சத்துக் குறைவான உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

“டிவி’ நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்களது பெற்றோருடன் அமர்ந்து, “டிவி’ பார்ப்பதையே விரும்புகின்றனர்.

“ரியாலிட்டி ÷ஷா’க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர். பெரும்பாலான, “டிவி’ நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, “டிவி’ நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக