வியாழன், 3 மே, 2012

உங்கள் செல்லங்களை செக் பண்ணுங்க




கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் பாதுகாப்பாய் இருக்கும் குழந்தைகள் பிறந்த உடன் எத்தனையோ சோதனைகளை சந்திக்கின்றன. ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்பட்டுவிட்டால் அவர்களை மிகப் பெரிய நோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம் என்பதற்காகவே இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிதாய் பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோய் பாதிப்புகள் எதுவும் இன்றி இருக்கின்றனரா என்பதை அறிய எந்த வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று குழந்தை நல மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆரோக்கிய அம்சங்கள்

பிறந்த ஐந்து நிமிடத்திலேயே அப்கர் ஸ்கோர் எனப்படும் முதல் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பரிசோதனை, இதயத் துடிப்பு வேகம், சுவாசித்தல், தசைகளின் ஆரோக்கியம், அனிச்சைச் செயல்கள், மற்றும் தோலின் நிறம் போன்ற ஐந்து வித்தியாசமான காரணிகளை உபயோகித்து புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் நலனின் ஆரோக்கியமான அம்சங்களை மதிப்பீடு செய்யப்படுகின்றன.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு உடற்பரிசோதனை கண் மற்றும் காது கேட்டல் மற்றும் பல்வேறு பிறப்புறுப்பு சம்பந்தமான ஒழுங்கின்மை என்பனவற்றைக் கண்டறிவதற்காக திரைப் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைகளின் போதே நோய்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்
பரிசோதனை

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு, கண் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பிறந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர், எரித்றோமைஸின் எனப்படும் கண் பூசு மருந்து கொடுக்கப்படும். இரத்தம் தகுந்த முறையில் உறைவதை உறுதி செய்வதற்காக, அவனுக்கு வைட்டமின் K ஊசி மருந்து கொடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் மலம் மற்றும் சிறுநீரின் வெளியேற்றங்கள் கண்காணிக்கப்பட்டு மஞ்சள்காமாலைக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

ரத்தப்
பரிசோதனை

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும். இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

ஹார்மோன்
உற்பத்தி

பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையை பாதுகாக்க முடியும். அதேபோல் பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்க முடியும் என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக