செவ்வாய், 18 அக்டோபர், 2011

தூங்குடா செல்லம் தூங்கு…



வாழ்வின் இனிமையான பருவங்களுள் ஒன்று, குழந்தைப் பருவம். எந்தக் கவலையையும், சுமையையும் உணராத பருவம். பெற்றோரின் அன்பு, அரவணைப்பை, தாயின் பாச மழையை முழுமையாக அனுபவிக்கும் பருவம்.

வெளிக்காற்றைச் சுவாசிக்கும் முதல் நொடி துவங்கி, விவரம் அறியும் வயது வரை குழந்தைப் பருவம் அடங்கும். ஒரு குழந்தையின் ஆரம்ப அடிகள் சில இங்கே…


உணவும், உறக்கமும்


உணவு தான் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதல் முக்கியமான விஷயம். தூக்கம், இரண்டாவது. சிசு, ஒவ்வொரு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் பருகுகிறது. அதைப் போல தூக்கமும் விட்டு விட்டுத் தொடரும். சுமார் எட்டுப் பகுதிகளாக, 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் தூங்குகிறது, புதிய குழந்தை. ஒரு மாத அளவில், குழந்தையானது தூக்கம், பால் அருந்துவதில் ஒரு குறிப்பிட்ட சீரான முறைக்கு வந்து விடுகிறது.

* குழந்தையை அழாமல் சந்தோஷமாக வைத்திருப்பதை எந்தக் கல்லூரியும், படிப்பும் ஒரு தாய்க்குப் போதிப்பதில்லை. அது அவரின் உள்ளுணர்வில் பிறக்கிறது.


பார்வை


புதிதாகப் பிறந்த குழந்தையால் 12 அங்குலங்கள், அதாவது 30 சென்டிமீட்டர் நீளத்துக்குத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். நேரடியாகச் சொல்வதென்றால், குழந்தை தன்னை வைத்திருப்பவரின் முகத்தைத்தான் நன்றாகப் பார்க்க முடியும். எனவே குழந்தைக்கு அதிக ஆர்வமூட்டும் விஷயம், அதன் அம்மாவின் முகம் தான். அதைப் போல, எதிரெதிர் வண்ணங்கள் கொண்ட பொருட்களும் குழந்தைகளை ஈர்க்கின்றன.


தொடுவதும்… அணைப்பதும்…


தங்களைத் தூக்கி வைத்திருப்பதை புதிய குழந்தைகள் விரும்புகின்றன. முத்தமிடுவது, உடம்பைத் தடவுவது, மென்மையாகத் தட்டிக்கொடுப்பது, `மசாஜ்’ செய்வது ஆகியவற்றையும் குழந்தைகள் ரசிக்கின்றன. உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்ள, தொடுகை ஒரு முக்கியமான வழியாகும்.

* நான் எனது முதல் குழந்தையைப் பெற்றபோதுதான், எனது தாய் என்னை எந்த அளவு நேசித்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். -ஓர் இளம்தாய்.


கற்பது உடனே தொடங்குகிறது


சில வேளைகளில் உங்களின் குட்டிப் பாப்பா அமைதியாகவும், உஷாராகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குழந்தை கற்பதற்குச் சிறந்த நேரம் அதுவே. அந்தக் காலகட்டத்தை, குழந்தையுடன் விளையாடவும், பேசவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையிலேயே குழந்தைகளால் முகங்கள், சைகைகளைப் புரிந்து கொள்ளவும், சிலவற்றை `இமிடேட்’ செய்யவும் கூட முடிகிறது. திருப்பிச் செய்வதற்கு நீங்களே அதற்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.

 திரும்பத் திரும்ப நாக்கை நீட்டுவது, புருவங்களை உயர்த்துவது போன்றவற்றைக் குழந்தை கவனிக்கும். சில நிமிடங்களில் அவற்றைத் திரும்பச் செய்யும். திரும்பச் செய்யாவிட்டாலும் அது கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.


குழந்தையுடன் விளையாடுவது


`பளிச்’சென்ற வண்ணங்கள் கொண்ட நகரும் பொருட்கள், பட்டையான கோடுகளால் ஆன பெரிய படங்கள் கொண்ட புத்தகங்கள், பிறந்த குழந்தையைக் கவருகின்றன. ஆனால் அவற்றை யெல்லாம் அதற்கு அதிகமாகக் காட்டித் திணிக்க முயல வேண்டாம்.

குழந்தையால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் தான் கவனம் செலுத்த முடியும். சிலநேரங்களில் அந்த ஆர்வத்தையும் காட்டாது. தனக்கு ஆர்வமில்லை என்பதை, கொட்டாவி விடுவது, பார்வையை விலக்குவது, முகத்தைத் திருப்புவது, முதுகை வளைப்பது, முனகுவது, அழுவது போன்றவற்றின் மூலம் காட்டும். அதைப் போல தான் விரும்பி ரசிப்பதையும் குழந்தை உங்களுக்குப் புரிய வைத்துவிடும்.


எழுத்துகளைக் கற்பிக்கச் சிறந்த வழி


இரண்டு முதல் மூன்று வயதுக் காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் சில எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. நான்கு- ஐந்து வயதில் ஏறக்குறைய எல்லா எழுத்துகளையும் கற்றுக்கொள்கின்றன. அதாவது நீங்கள் இரண்டு வயதிலேயே குழந்தைக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் உடனேயே அவர்கள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். படங்கள் நிறைந்த, பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்கள், குழந்தைக்கு ஆர்வமூட்டும். தான் கற்றுக்கொண்ட எழுத்துகள், வண்ணங்கள், வடிவங்கள், பொருட்கள், விலங்குகளைச் சுட்டிக் காட்டுவதில் குழந்தை ஆர்வம் காட்டும்.


பேச்சு


குழந்தைகள் தங்கள் முதல் இரண்டாண்டுகளில் பேசக் கற்றுக்கொள்கின்றன. தாங்கள் பார்ப்பதை, கேட்பதை, உணர்வதை விவரிக்க முயல்கின்றன. ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசும் முன்பே, மொழியின் விதிகளையும், பெரியவர்கள் அதை எப்படிப் பயன்படுத்தித் தொடர்புகொள்கிறார்கள் என்றும் புரிந்து கொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.


வளைந்திருக்கும் கை, கால்கள்


புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கை, கால்கள் நேராக இருப்பதில்லை. அவை சற்று வளைந்த நிலையில் இருப்பது இயற்கை. வெளிப்புற உலகுக்கு வந்ததுமே அவற்றின் கை, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நேராகத் தொடங்கி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக