செவ்வாய், 18 அக்டோபர், 2011

தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு



குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ், சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தமிழ்நாட்டு சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி உள்ளது. அதற்கு என்ன செய்யலாம்?
தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.

தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் பூண்டு நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.

இதனால்தான் குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கு குளிக்கும்போது நல்லெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது பூண்டும் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்யும் வழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக