தினசரி செய்தித்தாள்களிலோ அல்லது டிவியிலோ நாம் பார்க்கும் விஷயம் பெண்கள், குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் தொந்தரவுகள் பற்றிய வேதனைக்குரிய சம்பவம்தான். அங்கொன்றுமாக இங்கொன்றுமாக பெரியவர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளைப் பற்றி செய்தித்தாள்கள் அடிக்கடி அலாரம் அடிக்கத்தான் செய்கின்றன. "நினைக்கவே நெஞ்சம் பதறுகிற இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருடைய கைகளில்தான் இருக்கிறது. அதற்கான விழிப்புணர்வு எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி. குழந்தைகளை எப்படியெல்லாம் ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும்... அவர்களுக்கு எதையெல்லாம் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும் என்பது பற்றி விரிவாகப் பேசினார் ஜெயந்தினி.
"குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன்னும் சரி, அவர்கள் பள்ளி செல்லும் காலத்திலும் சரி... வெளி உலகை எதிர்கொள்ள அவர்களை மனரீதியாகத் தயார்ப்படுத்த வேண்டியது பெற்றோரின்... முக்கியமாக அம்மாக்களின் மிக முக்கிய கடமை....
குழந்தை பேசத் துவங்கும் பருவத்திலேயே அதன் கழுத்து வரைக்கும் யார் தொட்டாலும் அது "குட் டச்.... அதற்குக் கீழே எங்கே தொட்டாலும் அது "பேட் டச்" .... என்கிற இந்த வித்தியாசத்தை அடிக்கடி சொல்லி அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்.
"யாராவது உன்னை "பேட் டச்" பண்ணினா, உடனே, அவங்ககிட்ட "இது பேட் டச்... அம்மாகிட்ட சொல்லித் தருவேன். நான் உனக்கு பயப்படவெல்லாம் மாட்டேன்...." என்று சொல்லச் சொல்லி குழந்தையைப் பழக்க வேண்டும்.
அதோடு, "அப்படி யாராவது தொட்டா நீ என்கிட்ட சொல்லு. அவங்க ரொம்ப கெட்டவங்க...." என்று சொல்லி, "அந்த நபர் ஏதோ தவறு செய்கிறான்.. அவன் தண்டனைக்கு உரியவன்" என்கிற எண்ணத்தைக் குழந்தையின் மனதில் விதைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை அப்படிச் செய்கிறவர்களைப் பார்த்துப் பயப்படாது.
இதுபோன்ற கயவன்களின் ஆயுதமே "மிரட்டல்"தான். "நம்மையோ, நம் பெற்றோரையோ இவன் ஏதாவது செய்து விடுவான்" என்று பயந்து போய்த்தான் தங்களுக்கு நடக்கிற அநியாயத்தைக் குழந்தைகள் பொறுத்துக் கொள்கின்றன.
எனவே, "நம் அப்பா அம்மாவுக்கு எல்லா வல்லமைகளும் உண்டு. அவர்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.... அவர்களிடம் சொன்னால், நம் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்கிற தைரியத்தை குழந்தையின் மனதில் ஏற்படுத்தினாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.
அப்படியெனில், மீதி பிரச்சினை? அதற்கானத் தீர்வும் பெற்றோரிடம்தான் இருக்கிறது. சில குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரால் எதுவும் செய்ய முடியும் என்கிற தைரியம் இருக்கும். ஆனால், "நடந்த இந்த விஷயத்தைச் சொன்னால், எங்கே அவர்கள் தன்னைத் தண்டிப்பார்களோ" என்று பயந்து உண்மையை மறைப்பார்கள். இதற்குக் காரணம், குழந்தையை அளவுக்கு அதிகமாகத் தண்டிப்பது. இப்படி தண்டனைக்குப் பழகிப் போகும் குழந்தை ஏதேனும் தவறு நடந்தாலே "நாம்தான் குற்றவாளி" என்கிற எண்ணத்திலேயே இருக்கும். பெற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லாது" என்று குழந்தையின் மனநிலையைத் தெளிவாகப் படம் பிடித்தார்.
தொடர்ந்து, "தினமும் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்ததும் அவர்களிடம் இயல்பாகப் பேசி நட்பாகப் பழகுவது மட்டும்தான் இதைத் தடுக்க இதற்கு ஒரே வழி. முதல் பீரியடில் நடந்த பாடத்திலிருந்து வீட்டுக்கு வந்து ஷூ கழற்றுவது வரை எல்லாவற்றையும் மெதுவாக, அதே நேரம் உற்சாகமாக விசாரிக்க வேண்டும். இப்படி தினமும் அவர்களது பேச்சுக்கு காது கொடுத்தால், அவர்களே மனம் திறந்து பேச ஆரம்பித்து விடுவார்கள்" என்று விளக்கியவர், இன்னும் சில முக்கியமான அணுகுமுறைகளையும் பகிர்ந்துக் கொண்டார்....
"ஒருவேளை தனக்கு நேர்ந்திருக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் பற்றி குழந்தை சொன்னால், உடனடியாக ஆக்ரோஷமாகி விடக் கூடாது. "நடக்கக் கூடாத ஏதோ ஒன்று தனக்கு நேர்ந்து விட்டது" என்று குழந்தை மிரண்டு போய் விடும்.
"சரி.... இனிமே தனியா அங்க போகாத.... அம்மாவோட வா... சரியா?" என்று மட்டும் சொல்லிவிட்டு, அந்தக் குறிப்பிட்ட நபரிடமிருந்து குழந்தையை விலக்குங்கள். அந்த நபரை முழுவதுமாகத் தவிர்த்து விட முடியும் எனில், உங்கள் கணவரிடமும் விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, இனி அந்த நபர் உங்கள் வீட்டுப் பக்கம் வராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். முதல் தடவை நட.ந்த அந்த நிகழ்வை பதமாகக் கையாளுங்கள். அடுத்தடுத்துத் தொடர்ந்தால் தீவிர நடவடிக்கை எடுங்கள்." என்றவர், விளையாட்டுக்காகச் செய்கிற சில விஷயங்களிலும் கூடுதல் கவனம் தேவை என்பதைச் சுட்டிக் காட்டினார்...
"வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகளிடம் விளையாட்டுக்காக அவர்களது அந்தரங்க உறுப்பில் கிச்சுக்கிச்சு மூட்டுவது போன்ற செயல்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இதனால், வெளியாட்கள் இப்படி நடந்துக் கொள்ளும்போது குழந்தைகளுக்கு அது தவறாகத் தோன்றாது...." என்று எச்சரித்தவர்,
"ஒவ்வொரு குழந்தையுமே ஒருவித அறிவுப் பசியோடுதான் இந்த உலகத்தைப் பார்க்கிறது. அதனால் தான் புதிதாகப் பார்க்கும் ஒவ்வொரு பொருளையும் உருட்டி, புரட்டி "அதில் என்னதான் இருக்கிறது?" என்று கற்றுக் கொள்ளத் துடிக்கிறது. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறையையே அந்த அறிவுப் பசிக்குத் தீனியாகத் தந்தால், கற்றுக் கொள்ளாமலா போய்விடும்!" என்றார் முத்தாய்ப்பாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக