தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.
புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.
இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக