தேவையானப்பொருட்கள்:
கீரை - 1 கட்டு (எந்த கீரையையும் பயன்படுத்தலாம்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தங்கள் சுவைக்கேற்றவாறு
எண்ணை - 5 முதல் 6 டேபிள்ஸ்பூன் வரை
செய்முறை:
கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ளக் கீரையைப் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும். கீரை சற்று ஆறியதும் அத்துடன் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பிசையவும். கைகளைத் தண்ணீரில் தொட்டுக் கொண்டு (அப்பொழுதுதான் கைகளில் ஒட்டாமல் இருக்கும்) எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டி பின்னர் சற்று அழுத்தி வடை போல் தட்டிக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை விட்டு தேய்த்துக் கொள்ளவும். அதில் தட்டி வைத்திருக்கும் கட்லட்டை (4 அல்லது 5 அல்லது கல்லில் இடம் இருக்கும் வரை) ஒன்றுடன் மற்றொன்று படாமல் வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கட்லட்டைச் சுற்றி 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணை விடவும். ஒரிரு நிமிடங்கள் பொறுத்து, தோசைத் திருப்பியால் திருப்பி விட்டு, மீண்டும் சிறிது எண்ணையை சுற்றி விட்டு வேக விடவும். கட்லட் நன்றாக இருபுறமும் சிவக்கும் வரை திருப்பி திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
பின்குறிப்பு: இதை எந்த வித சாத வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். ரசம், மற்றும் சாம்பார் சாதத்துடன் தொட்டுக் கொள்ள மேலும் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக