வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பூண்டு வெங்காயக் கார குழம்பு

 

தேவையானப்பொருட்கள்:

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 8 முதல் 10 வரை
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
தனியா - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கச கசா - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு (2")

தாளிக்க:

நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை தண்ணீரில் ஊற வைத்து, 2 கப் அளவிற்கு புளி தண்ணீரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆற விட்டு, நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணையை சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போட்டு, அது வெடித்தவுடன், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதினைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வரும் பொழுது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு மீண்டும் கொதித்து, சற்று கெட்டியானவுடன், இறக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு சுவையுடன் சற்று காரமான இந்தக் குழம்பு, குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக