வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கத்திரிக்காய் காராமணிக் குழம்பு

 

தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 2
காராமணிப்பயறு - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் காராமணியை சிவக்க வறுத்து, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உப்பு, புளி இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, பிழிந்து, புளித்தண்ணீரைத் தனியாக எடுக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் கசகசா, சீரகம், தேங்காய்த்துருவல் ஆகியவற்றைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சற்று ஆறியபின், விழுதாக அரைத்தெடுக்கவும்.

கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் கத்திரிக்காய் துண்டுகள், வேக வைத்த காராமணி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 2 கப் நீரையும் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து, காய் வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டுக் கிளறவும். மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக