வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கத்திரிக்காய் மசாலா குழம்பு


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 அல்லது 6 (ஒரே அளவான சிறிய கத்திரிக்காய்)
புளி - எலுமிச்சம் பழ அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4 அல்லது 5 பற்கள்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 2 அல்லது 3


தாளிக்க:

பட்டை - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காயை நான்காகக் கீறி விட்டு, அடிபாகத்தை வெட்டாமல் முழுதாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா, முந்திரி ஆகியவற்றை, சிறிது நீர் தெளித்து நன்றாக அரைத்து, அரைத்த மிக்ஸியையும் கழுவி அதையும் விழுதுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் பட்டையைப் போட்டு பொரிக்கவும். பின் அதில் கடுகு, சோம்பு போட்டு, கடுகு வெடித்தவுடன், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும். 5 நிமிடங்கள் வதக்கியபின் அதில் தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி விடவும். அதன் பின் அதில் புளித்தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தேவையான அளவு சிறிது தண்ணீரையும் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதி வந்து, கத்திக்காயும் நன்றாக வெந்தவுடன், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

இதில் கத்திரிக்காயிற்குப் பதில் உருளைக் கிழங்கைச் சேர்த்தும் செய்யலாம். அல்லது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் இரண்டையும் சேர்த்து செய்யலாம். மசாலா வாசனை பிடித்தவர்களுக்கு இந்த குழம்பு மிகுந்த சுவையாயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக